அ.தி.மு.க பாஜக கூட்டணி முறிவு தமிழக அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுகவுடன் பாஜக கூட்டணி வைத்ததால் பல்வேறு அரசியல் கட்சிகள் அதிமுக மீது அதிருப்தியில் இருந்தன. இந்த நிலையில் பா.ஜ.கவை விட்டு வெளியேறினால் பல கூட்டணிக் கட்சிகளை தன் பக்கம் ஈர்த்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கலாம் என எடப்பாடி வியூகம் வகுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த சூழலில் நேற்று முன்தினம் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணியிலிருந்து வெளியேறியதாக அதிகார்பூர்வமாக தெரிவித்தது. இந்த முடிவை பல்வேறு அரசியல் கட்சிகளும் வரவேற்றது. குறிப்பாக எஸ்.டி.பி.ஐ கட்சி அதிமுகவின் முடிவை வரவேற்றுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், “பாஜக அல்லாத அதிமுக கூட்டணியில் இணையத் தயார்” என தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தான் தற்போது பாஜக கூட்டணியிலிருந்து அதிமுக விலகியிருப்பது எடப்பாடிக்குச் சாதகமாக அமைந்துள்ளது என்று கூறலாம்.
அதிமுக-வுடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி கூட்டணி வைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த நிலையில் விசிக கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னிஅரசு, “விசிக கட்சி திமுக கூட்டணியில் தான் உள்ளது” என அறிவித்தார். இந்த அறிவிப்பால் விசிக அதிமுக கூட்டணி இல்லை என்பது உறுதியாகிவிட்டது.
இந்தநிலையில் நேற்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். இந்த அழைப்பு திருமாவளவன் உடல் நிலை குறித்து விசாரிக்கத்தானே தவிர அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
தி.மு.க கூட்டணியில் இருக்கும் வி.சி.க 2024 தேர்தலில் 3 தொகுதிகள் வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது. ஆனால் 2 சீட்டுகள் மட்டுமே ஒதுக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனைச் சாதகமாக எடப்பாடி பழனிசாமி பயன்படுத்திக்கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியை அ.தி.மு.கவுடன் இணைப்பது குறித்து வியூகம் வகுப்பதாகத் தெரிகிறது.
அ.தி.மு.க-வின் புதிய கூட்டணியில் யார் யாரை இணைக்கலாம் என்பது குறித்து எடப்பாடி பழனிசாமி எடுக்கும் முடிவுகள் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலின் போது தெரிய வரும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.