சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்தில் அதிமுக-வின் மதுரை மாநாட்டுக்கான இலட்சினை வெளியிடப்பட்டது. பொன்விழா எழுச்சி மாநாடு என குறிப்பிடப்பட்டு ஆகஸ்ட் 20 ஆம் தேதி மாநாடு நடக்க இருப்பதாகவும் இலட்சினையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து தொண்டர்களிடையே பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அதிமுகவை வீழ்த்த முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக எத்தனையோ வித்தைகளை அரங்கேற்றியது. அத்தனையும் அதிமுக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மூலம் தகர்த்தெறியப்பட்டுள்ளது. அதேபோல் பல விமர்சனங்களை கடந்த ஓராண்டு காலத்தில் சந்தித்தோம். அதிமுக மூன்று நான்கு துண்டுகளாக போய்விட்டது என்றும் தொண்டர்கள் குறைந்துவிட்டனர் என்றும் எதிரிகள் விமர்சனம் செய்து வந்தனர். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒன்றரை மாதத்தில் ஒரு கோடியே அறுபது உறுப்பினர்களை சேர்த்து சரித்திரம் படைத்துள்ளோம்.
தமிழகத்தில் அதிக உறுப்பினர்களை கொண்ட கட்சி அதிமுக தான். சிலர் இயக்கத்தை முடக்க வேண்டும், உடைக்க வேண்டும் என கனவு கண்டார்கள். திமுகவின் பி டீமாக செயல்பட்டார்கள். அவர்களுக்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக 75 நாட்களில் அதிமுகவினர் அற்புதமாக செயல்பட்டுள்ளனர்.
அடுத்து வரும் தேர்தலுக்கு அடித்தளமாக பொன்விழா எழுச்சி மாநாடு மதுரையில் அமையும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மேகதாது அணை தொடர்பாக உச்சநீதிமன்றம் தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் வேண்டுமென்றே அரசியல் செய்ய நாடகத்தை அரங்கேற்றி வருகிறது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் தொடர்ச்சியாக சட்டப்போராட்டம் நடத்தி உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பை பெற்றோம். அந்த தீர்ப்பை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று எங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமார் 22 நாட்கள் குரல் கொடுத்தனர். அந்த காரணத்தால் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு கிடைக்க வேண்டிய பங்கு நீரை முறையாக கொடுத்துக் கொண்டு இருந்தனர். இப்போது காங்கிரஸ் திமுக கூட்டணியில் உள்ளது. ஏன் முதலமைச்சர் அவர்களிடத்தில் பேசக்கூடாது? இந்தியா முழுவதும் ஒருங்கிணைக்கும் தமிழ்நாட்டு முதலமைச்சர், கர்நாடகத்தில் காங்கிரஸிடம் பேசி ஜூன் மாதத்தின் தண்ணீரை ஏன் பெறவில்லை?
தக்காளி மட்டுமல்ல பல பொருட்கள் விலை அதிகமாகிவிட்டது. தக்காளி கிலோ ரூ.160க்கு விற்கப்படுகிறது. சின்னவெங்காயம் ரூ.150, பூண்டு ரூ.80ல் இருந்து ரூ.150 க்கு விற்கப்படுகிறது. துவரம்பருப்பு ரூ.110ல் இருந்து ரூ.150 க்கு விற்கப்படுகிறது. இதுமட்டுமல்ல ஏழை மக்கள் அன்றாடம் வாங்கும் மளிகை சாமான்கள் அத்தனையும் கிட்டத்தட்ட 70% உயர்ந்துள்ளது. இதைப் பற்றி எல்லாம் முதலமைச்சருக்கு கவலை இல்லை. இப்போது குட்டி அமைச்சர் ஒருவர் வந்துள்ளார். ரெட் ஜெயண்டில் படம் எடுத்துள்ளார். மாமன்னன் படம் எப்படி என நீங்களே (ஊடகங்கள்) கேட்கிறீர்கள்.
நாட்டில் விலைவாசி ஏறிவிட்டது. அதைப் பற்றி அவர்களிடம் கேளுங்கள். மாமன்னன் படம் ஓடினால் என்ன இருந்தால் என்ன? இதுவா நாட்டு மக்களுக்கு தேவை? அதுவா வயிற்று பசியை போக்கப்போகிறது?
மாமன்னன் திரைப்படத்தில் வேதனைக்குரிய விஷயம் ஒன்று. இவர்கள் தான் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய எழுச்சி ஏற்பட்டதாக திரைப்படத்தின் மூலம் தோற்றத்தை ஏற்படுகிறார்கள். நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் முதன்முதலாக ஆளுநரின் உத்தரவின்படி அன்றைய சட்டப் பேரவைத் தலைவர் தனபால், பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்டினார்.
அப்போது அவரை இருக்கையில் இருந்து இழுத்து கீழே தள்ளி மைக், மேஜை போன்றவற்றை உடைத்து பெரும் ரகளையில் ஈடுபட்டு புனிதமான அவரது இருக்கையில் அமர்ந்த கட்சிதான் திமுக. இவர்களா தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நன்மை செய்வார்கள்? மேலும் அவர்மேல் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்தார்கள். தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு என்ன தகுதி உள்ளது?” என காட்டமாக விமர்சித்தார்.