திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் ஜெ.சீனிவாசனின் இளைய சகோதரி கெஜலெட்சுமி சமீபத்தில் காலமானார். திருச்சி பாலக்கரையில் உள்ள இல்லத்தில் அவரது உருவ படத்தினை திறந்து வைத்து அஞ்சலி செலுத்திய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னைக்கு செல்லும் வழியில் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, ‘பாஜகவுடன் அதிமுக மீண்டும் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைக்குமா?’ என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அவர் அதை தவிர்க்கவே, மீண்டும் மீண்டும் செய்தியாளர்கள் கேள்வி கேட்கவே, “அதிமுகவின் தலைமையை ஏற்றுக் கொள்ளக்கூடிய, ஒத்த கருத்துடைய கட்சியுடன் அதிமுக கூட்டணி வைக்க தயார்” என்று எடப்பாடி தெரிவித்தார்.
தொடர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் குறித்து பேசிய இபிஎஸ், “எடப்பாடி ஆட்சிக்காலத்தில் மக்களுக்கு பயனுள்ள திட்டங்களை வழங்கவில்லை என அரசு நிகழ்ச்சியில் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஜெயலலிதா மறைவிற்கு பின் ஆட்சிக்கு வந்த நான் நான்காண்டு காலம் சிறந்த ஆட்சியை வழங்கியுள்ளேன். வேண்டுமென்றே திட்டமிட்டு முதல்வர் ஸ்டாலின் என்னைப் பற்றி விமர்சனம் செய்வது கேலிக்கூத்தாக உள்ளது.
ஒரேவருடத்தில் புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள், 6 சட்டக் கல்லூரிகளைளை கொண்டு வந்தோம். இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளோம். ஆனால் அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட ஒரே காரணத்திற்காக சேலம் கால்நடை ஆராய்ச்சி பூங்கா இன்னும் திறக்கப்படவில்லை. அத்திக்கடவு அவிநாசி திட்டம் போன்ற எண்ணற்ற திட்டங்களை திமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது.
தற்போது விவசாய பணிகள் மேற்கொள்ளும் காலம். ஆனாலும் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு போதிய உரம் கிடைக்கவில்லை. தேர்தல் காலத்தில் திமுக அறிவித்த திட்டங்களில் 10% கூட திமுக அரசு நிறைவேற்றவில்லை. கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர் ஸ்டாலின்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை, பொதுப்பணித்துறை, உயர் கல்வித் துறை போன்ற துறைகளில் சிறப்பான பணிகளுக்காக இந்திய அளவில் பல்வேறு விருதுகளை தமிழகம் பெற்றுள்ளது. அப்போது சட்டம் ஒழுங்கை பேணிக்காப்பதில் தமிழகம் முதன்மையாக விளங்கியது. தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனை தாராளமாக உள்ளது” என்று குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அவர், “உதயநிதி நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கி சிறந்த அமைச்சராக வந்துள்ளார் என்றால் மற்ற அமைச்சர்கள் சிறப்பாக செயல்படவில்லையா? கலைஞரின் அடையாளத்தில்தான் ஸ்டாலின் முதல்வராகியுள்ளார். கலைஞரின் பேரன், ஸ்டாலின் மகன் என்ற ஒரே காரணத்திற்காக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது.
கருணாநிதி குடும்பத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே பதவிகள் கிட்டும். ஆனால் அதிமுக-வில் அதுபோன்று இல்லாமல் அடிமட்ட தொண்டனுக்கும் பதவிகள் கிட்டும். திமுக ஆட்சிக்கு வந்த மூன்றாண்டு காலத்தில் 3 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. பொதுமக்கள் மீது கடன் சுமையை சுமத்தியதுதான் திமுக அரசின் சாதனை. கடன் மேல் கடன் வாங்கி மக்களுக்கு பயனற்ற திட்டங்களை கொண்டு வந்து மக்களின் வரிப்பணத்தை ஊதாரிதனமாக செலவிடுவதை தடுக்க வேண்டும்.
கருணாநிதி மகன் என்ற அடையாளம் இல்லை என்றால் ஸ்டாலின் கவுன்சிலராக கூட ஆக முடியாது. அதிமுகவின் திட்டங்கள் குறித்து துண்டு சீட்டு இல்லாமல் பட்டியலிட்டு ஒரே மேடையில் ஸ்டாலினுடன் விவாதிக்க நான் தயாராக உள்ளேன். அவர் தயாரா?” என கேள்வி எழுப்பி விமர்சித்து பேசினார்.