பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவரது வீட்டின் அருகே படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆஸ்ம்ட்ராங் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக, ஆம்ஸ்ட்ராங் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ஆகியோர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு நேரில் சென்று குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியும் ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்துள்ளார். அப்போது வடசென்னை அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
இதன்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “இந்த படுகொலை மிகுந்த மனவேதனை அளிக்கிறது. மிக துரதிர்ஷ்டவசமானது. கொலை செய்த கொலையாளிகள் பைக்குகளில் தப்பிச்செல்லும் காட்சிகளைப் பார்க்கும்போது, இது திட்டமிடப்பட்ட கொலை என்பது தெரிகிறது. சமூகத்தில் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி இந்த அரசு தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
ஒருமாத காலத்தில் பல அரசியல் கொலைகள் நடந்துள்ளன. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர் கெட்டுவிட்டது. அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை; பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இந்த அரசு உண்மைக் குற்றவாளிகளை சட்டத்தின்முன் நிறுத்தி அவர்களுக்கு கடும் தண்டனைகளைப் பெற்றுத்தர வேண்டும்.
இந்த கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை என ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும், பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளும் கருதுகிறார்கள். எனவே உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களது சந்தேகத்தைப் போக்குவது இந்த அரசின் கடமை. உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டுமானால், இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.