சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை நீர் முற்றாக தேங்காதவாறு நிரந்தர தீர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நாளை முதல் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ள சூழலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் ஆட்சியர்கள், சென்னை மாநகராட்சியின் 15 மண்டல அலுவலர்கள், மழைக்காக நியமிக்கப்பட்ட ஏழு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள், பொதுப்பணித்துறை அதிகாரிகள், 3 மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்கள், சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஏகே விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர், எதிர்வரும் மழையை சமாளிக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அமைச்சர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் மேற்கொண்டது வடிகால் முறைகள் குறித்து அறிவதற்காகத்தான் எனத் தெரிவித்தார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலேயே 4034 கோடி ரூபாய்க்கு வடிகால்கள் அமைக்க திட்டம் வகுக்கப்பட்டதாகவும், இதில் 1101 கோடி ரூபாய் அளவிலான பணிகள் நிறைவடைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 386 கிலோமீட்டர் தூரத்திற்கு வடிகால்கள் அமைக்க திட்டமிடப்பட்டு 300 கிலோமீட்டர் தூரத்திற்கு வடிகால்கள் அமைக்கப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார். மத்திய அரசிடமிருந்து வெள்ள நிவாரணத்திற்காக கோரிய உதவி கிடைக்கும் என்றும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.