மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியான கலை மற்றும் அறிவியல் கல்லூரியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குத்துவிளக்கு ஏற்றித் திறந்து வைத்தார்.
பின்னர் அமைச்சர்கள், ஆதரவு எம்.எல்.ஏக்கள், கல்லூரி மாணவ, மாணவிகளுடன் மதிய உணவு அருந்திவிட்டு மேடை ஏறிய முதல்வர் ஏதும் பேசாமல் கீழே இறங்கிவிட்டார். கல்லூரி திறப்பு விழாவிற்கு வந்த முதல்வர் ஏதும் பேசாமல் சென்றதால் மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியான கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருமங்கலம் அருகே 7 கோடியே 25 லட்சம் மதிப்பில் கப்பலூரில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளது. இக்கல்லூரிக் கட்டிடத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றினார். பின்னர் அமைச்சர்கள், ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுடன் மதிய உணவு அருந்தினார். அதனைத் தொடர்ந்து மேடை ஏறிய முதல்வர் ஏதும் பேசாமல் மாணவ, மாணவிகளை பார்த்து கும்பிட்டுவிட்டு கீழே இறங்கிவிட்டார். செய்தியாளர்களையும் சந்திக்கவில்லை, கல்லூரி திறந்த வைத்த முதல்வர் ஏதும் பேசாமல் சென்றதால் அவரை காண வந்த மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இக்கல்லூரி 8.53 ஏக்கர் பரப்பளவில் 49,583 சதுரடியில் தரை தளம் மற்றும் இரண்டு அடுக்குகளை கொண்ட கட்டடமாக கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 14 வகுப்பறைகள், 5 ஆய்வகங்கள், 1 பயிற்சி பட்டறை, 1 கூட்டுறவு அங்காடி, 1 நூலகம் மற்றும் 1 சுகாதார வளாகம் கல்லூரியில் அமைந்துள்ளன.
இவ்விழா உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர்ராஜு, செல்லூர்ராஜு, உதயகுமார், மணிகண்டன், ராஜேந்திரபாலாஜி, ராஜலட்சுமி, பாஸ்கரன், உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரி நிகழ்வில் ரிப்பன் வெட்டி திறப்பு விழாவினை தொடர்ந்து, நெல்லையில் நடைபெற உள்ள திருமண நிகழ்வு மற்றும் தூத்துக்குடியில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.