அமைச்சர் பொன்முடியின் பூட்டிய வீடு முன் காத்திருந்த ED அதிகாரிகள்! விழுப்புரத்தில் என்ன நடந்தது?
இன்று காலை 7:30 மணியளவில் தொடங்கிய அமலாக்கத்துறை சோதனையில், அமைச்சர் பொன்முடியை அதிகாரிகள் தங்களின் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதில் விழுப்புரம் சண்முகபுர காலனியில் உள்ள அமைச்சர் பொன்முடி வீட்டில் மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய சென்ற போது, அவரது வீடு பூட்டியிருந்தது. அமைச்சரும் அவரது மகனும் சென்னையிலுள்ள இல்லத்தில் இருப்பதால், “அமைச்சரோ அல்லது அவரது உறவினர்கள் வந்தால் மட்டுமே வீட்டை திறக்க முடியும்” என திட்டவட்டமாக கூறியுள்ளனர் விழுப்புரம் வீட்டிலிருந்த அமைச்சரின் உதவியாளர்கள். இதனால் சோதனைக்காக சென்ற அதிகாரிகள் வீட்டின் வெளியே வெகுநேரம் காத்திருந்தனர்.
தொடர் பேச்சுவார்த்தைக்குப் பின்னர், வீட்டின் கீழ் தளத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் மட்டும் அமைச்சர் பொன்முடியின் உதவியாளர் முன்னிலையில் ஏழு பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை காரணமாக இந்த சோதனை நடைபெறுவதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆவணங்கள் கிடைத்த பின்னரே முழுமையான விவரங்கள் தெரிய வரும்.
விழுப்புரத்தில் அமைச்சரின் வீடு மட்டுமன்றி, விக்கிரவாண்டியில் உள்ள அவருக்கு சொந்தமான சூர்யா பொறியியல் கல்லூரி மற்றும் கப்பியாம்புலியூரில் உள்ள சிகா கல்வி அறக்கட்டளை ஆகியவற்றிலும் சோதனை நடத்தி வருகின்றனர் அமலாக்கத்துறையினர். விழுப்புரத்தில் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று இடங்களில் இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய ரிசர்வ் போலீசார் இந்த வளாகங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விழுப்புரம் மட்டுமன்றி சென்னையிலுள்ள அமைச்சர் பொன்முடியின் வீடு, அலுவலகத்திலும் சோதனை தொடர்கிறது. போலவே அவரின் மகன் கௌதம சிகாமணியின் வீட்டிலும் சோதனை நடைபெறுகிறது.