ஸ்பைஸ் இந்தியா மாசலா நிறுவனங்களுக்கு சொந்தமான 11 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு மசாலா பொருட்களான மிளகு, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஸ்பைஸ் இந்தியா நிறுவனங்கள் சார்பில் நிறுவன வளர்ச்சிக்காக ஒரு லட்சம் முதலீடு செய்தால் அதற்குப் பதிலாக மாதம் 8,000 முதல் 12 ஆயிரம் வரை கொடுக்கப்படும் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து விளம்பரம் செய்துள்ளனர்.
இதன் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஸ்பைஸ் இந்தியா நிறுவனம் அளித்த வாக்குறுதி பொய்யானது என தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஸ்பைஸ் இந்தியா நிறுவனத்தின் இயக்குநர் துரைராஜ் மற்றும் அவரது மனைவி சாரதா ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த விசாரணையில் இவர்கள் இதேபோன்று பல்வேறு பொய்யான திட்டங்களை அறிவித்து பொதுமக்களிடம் முதலீடு செய்யும்படி கூறி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் ஸ்பைஸ் இந்தியா நிறுவனத்தை போன்று ஆகாஷ் சுருதி பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலமும் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டது பொருளாதார குற்றப்பிரிவு போலீசாரால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஸ்பைஸ் இந்தியா மற்றும் ஆகாஷ் சுருதி பிரைவேட் லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்குச் சொந்தமான தமிழகம் முழுவதும் சென்னை கோவை சேலம் மற்றும் நீலகிரி உள்ளிட்ட 11 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல் கைது செய்யப்பட்ட நிறுவனத்தின் இயக்குநர் துரைராஜ் மற்றும் அவரது மனைவி சாததா ஆகியோர் தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இவர்கள் மீது இதே போல் பெங்களூர் ராஜகோபாலபுரம் காவல் நிலையத்திலும் மோசடி வழக்கு உள்ளது தெரியவந்துள்ளது.