ஒட்டன்சத்திரம் அருகே அதிகாலையில் நில அதிர்வு உணரப்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நில அதிர்வு ஏற்பட்ட பகுதியில், பத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் வீட்டுக்குள் செல்ல மக்கள் தயங்கி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கே.கீரனூர் ஊராட்சியில் கீரனூர் பகுதியில் அதிகாலை 2 மணி முதல் கிராமப் பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதாகவும், திடீர் திடீரென வெடிகுண்டு வெடிப்பது போன்ற சத்தம் வருவதாகவும் பொதுமக்கள் அச்சம் அடைந்து வீடுகளை விட்டு வெளியே வந்து ரோட்டோரங்களில் தஞ்சமடைந்துள்ளனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள 10க்கும் மேற்பட்ட வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளது. அதனால் பொதுமக்கள் அச்சத்துடன் பஞ்சாயத்து அலுவலகம் முன்பாக அமர்ந்துள்ளனர். இந்த சத்தம் மிக கடுமையாக இருந்ததாகவும் இதனால் பாத்திரங்கள் அசைந்து ஓடியதாகவும் லேசான விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனால் கீரனூர் கிராமப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
இதுபற்றி பழனி கோட்டாட்சியர் சிவகுமார், ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் முத்துச்சாமி நேரில் வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இது சம்பந்தமாக புள்ளியியல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புள்ளியியல் துறையினர் சென்று இது பற்றி நேரடியாக ஆய்வு செய்த பின்பே இந்த சத்தம் ஏன் ஏற்பட்டது, இந்த விரிசல் ஏற்பட்டதற்கான காரணம் என்ன போன்றவை தெரியவரும்.
சமீபத்திய செய்தி: எப்படி இருக்கு ராஜமவுலியின் ஆர்.ஆர்.ஆர்? ரசிகர்களின் கருத்து