கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் விதிமுறைகளை மீறி டெண்டர் ஒதுக்கியதாக, லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் அறப்போர் இயக்கம் புகாரளித்தது. 2018ஆம் ஆண்டு மழைநீர் வடிகால் மற்றும் சாலைகளை மேம்படுத்தும் திட்டத்தில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்தியது. எம்-சாண்ட் மணல் வகைகளை அதிக விலைக்கு நிர்ணயம் செய்த புகார் குறித்தும் விசாரிக்கப்பட்டது. இதில் டெண்டரில் முறைகேடு செய்து 26 கோடியே 61 லட்சம் ரூபாய் அளவில், அரசுக்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக கூறப்பட்டது.
முதற்கட்ட விசாரணையை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சென்னை மாநகராட்சி பொறியாளர்கள் 10 பேர் என மொத்தம் 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.