வேலூர் மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் நேற்று அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எம்பி கதிர் ஆனந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் நந்தகுமார், கார்த்திகேயன், வில்வநாதன், அமுலு உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “கட்சியில் ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடிக்க வேண்டும்; திமுக ஆட்சியின் 2 ஆண்டுகால சாதனை குறித்து அனைத்து பகுதி மக்களையும் சென்றடையும் வகையில் பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும்” என பேசினார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு அணை கட்டக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் வழக்குத் தொடர்ந்தோம். அப்போது உச்ச நீதிமன்றம், நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், மத்திய அரசு அமைக்காததால் மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றோம். ஏன் அமைக்கவில்லை என கேட்டதற்கு விரைவில் அமைக்கிறோம் என்று சொல்லி வருகிறார்கள்.
இது இப்போது மட்டுமல்ல. காவிரியிலும் பல ஆண்டு காலம் இதை தான் மத்திய அரசு கையாண்டது. இந்த முறையும் அமைக்காவிட்டால் மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு இவ்விவகாரத்தை எடுத்துச் செல்வதை தவிர வேறு வழியில்லை. ஆனால், எப்படியும் நீர் பங்கீடு தீர்ப்பாயம் அமைக்கும் வரையில் விடமாட்டோம்” என்றார்.
தொடர்ந்து அவரிடம் ‘தமிழகத்தில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை, கர்நாடகாவில் காங்கிரஸ் அறிவித்து வருகிறதே... அதை எப்படி பார்க்கிறீர்கள்?’ என செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'எங்கள் திட்டத்தை கர்நாடகாவில் அறிவித்திருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்றார்.