தமிழக அரசின் பொது விநியோக திட்டத்தால் தமிழகத்தில் விலைவாசி உயர்வின் தாக்கம் குறைவாக இருப்பதாக தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், “வட மாநிலங்களில் விலைவாசி உயர்வு 27 விழுக்காடு வரை இருக்கும் நிலையில் தமிழ்நாட்டில் 4 விழுக்காடு என்ற அளவில் தான் இருக்கிறது. அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு அரசு மானிய விலையில் பொது விநியாக திட்டத்தில் வழங்குவதால் விலைவாசி உயர்வு பாதிப்பு குறைவாக இருக்கிறது.
பொது விநியோகத் திட்டத்தை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இத்திட்டங்களுக்கு ஆண்டுக்கு சுமார் 7 ஆயிரத்து 500 கோடி ரூபாய் அரசு செலவு செய்கிறது. மேலும், அரசு, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை மானிய விலையில் வழங்குவதால் மக்கள் விலை உயர்வு பாதிப்பில் இருந்து காப்பற்றப்படுகின்றனர்.
ரேசன் அரசி கடத்தல் நடப்பதற்காக இலவச அரிசி திட்டத்தை கைவிட முடியாது. மாறாக, ரேசன் அரிசி கடத்தலை தடுக்க மக்கள் முன்வர வேண்டும். குறிப்பாக, ரேசன் அரிசி வேண்டாம் என்பவர்கள். வெள்ளை நிற ரேசன் அட்டை பெற முன் வந்தால் அரிசி கடத்தலை தடுக்கலாம். சிறப்பு பொது விநியோக திட்டத்தை ஆய்வு செய்ததில் அந்தியோதிய அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் 60 சதவீதம் பேர் பயன் அடைந்து வருகின்றனர். ஒன்றிய அரசு குறைவான விலையில் பொது விநியோக திட்டத்திற்கான பொருட்களை வழங்கினால் இன்னும் கூடுதலான மக்கள் பயன் அடைவார்கள்.” என்று தெரிவித்தார்.