பழனி முருகன் கோயிலில் உள்ள 5 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையான நவபாஷாண மூலவர் சிலையை திருட சதித்திட்டம் தீட்டப்பட்டது உண்மைதான் என சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
பழனி முருகன் கோயிலுக்காக 2004ஆம் ஆண்டு ஐம்பொன்னில் உற்சவர் சிலை செய்யப்பட்டது. அதில் முறைகேடு நடைபெற்றதை சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல்துறையினர் கண்டறிந்தனர். இதுதொடர்பாக ஸ்தபதி முத்தையா, இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால், இணை ஆணையர்கள் கே.கே.ராஜா, புகழேந்தி, தேவேந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் உற்சவர் சிலை செய்யப்பட்டதே மூலவர் சிலையை திருடத்தான் என்ற அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பழனி முருகன் கோயிலில், சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையில் சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய சிலைக்கடத்தல் தடுப்புப்பிரிவு டி.எஸ்.பி. முகேஷ் ஜெயக்குமார் தொன்மையான தண்டாயுதபாணி சிலையைத் திருட ரகசியத் திட்டம் தீட்டப்பட்டது உண்மைதான் என்றார்.