சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே செல்லியம்பாளையம் பகுதியில் சேலம் டூ சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவது வழக்கம். இருவழிச்சாலையாக இருக்கும் இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணியும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ராமநாயக்கன்பாளையம் செல்லும் பிரிவு சாலையில் நேற்றைய தினம் மது போதை ஆசாமி ஒருவர் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தார்.
போதை தலைக்கேறியதில், தன்னை ஒரு டிராஃபிக் இன்ஸ்பெக்டர் என்று நினைத்துக்கொண்டு, சரியாக வரும் வாகனங்களுக்கு வழிகாட்டிக்கொண்டிருந்தார் அந்த ஆசாமி. இதனால், சாலையில் வந்த வாகன ஓட்டிகள் அந்த நபர் மீது மோதாமல் இருக்க, ஒதுங்கி சென்றனர்.
தான் கேமராவால் படம்பிடிக்கப்படுகிறோம் என்பது தெரிந்த உடன், கேமராவுக்கும் பாவனை காட்டிய அவர், சற்று நேரத்தில் நடனமாடவும் தொடங்கினார். பிசியான சாலையில், போக்குவரத்துக்கு இடையூறாக இந்த நபர் அங்குமிங்கும் நடந்துகொண்டிருந்ததால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையை கடந்து சென்றனர்.