நாடுவிட்டு செல்லவிருந்த குடும்பத்தாரை தடுத்து நிறுத்த விமான நிலையத்துக்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக குடிபோதையில் புரளியை கிளப்பிய நபர் தற்போது போலீசாரின் கிடுக்குபிடி விசாரணை வலையில் மாட்டியுள்ளார்.
சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவரின் குடும்பத்தார் துபாய் செல்ல புறப்பட்டுள்ளனர். அவர்கள் பிரயாணத்தை தடுக்க நினைத்த அந்த நபர் குடிபோதையில் நகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்துள்ளார். மேலும் துபாய் செல்லும் விமானத்தில் வெடிகுண்டி வைத்திருப்பதாகவும், அது சற்று நேரத்தில் வெடித்துவிடும் என்றும் காலை 6 மணியளவில் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார். இதனையடுத்து காலை 7.20 மணிக்கு புறப்பட தயாராக இருந்த இண்டிகோ விமானத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டை தேடியுள்ளனர். ஆனால் முழுமையான அந்த சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.
இதனிடையே பாதுகாப்பு அதிகாரிகள் தங்களுக்கு வந்த போன் அழைப்பை ட்ரேஸ் செய்து விசாரித்ததில் அந்த நபர் தனது தங்கை வெளிநாடு செல்வதை தடுக்க வெடிகுண்டு வைத்திருப்பதாக புரளியை கிளப்பியது தெரியவந்தது. இதனையடுத்து விமானம் சரியான நேரத்தில் செல்லாமல் தாமதமாக புறப்பட்டு துபாய் சென்றடைந்தது.
விசாரணையில் அந்த நபர் மணலி பகுதியைச் சேர்ந்த மாரி செல்வம் என்பதும், அவருடைய தங்கையும், அவரது கணவரும் துபாய் செல்வதை தடுக்க எண்ணியே விமானத்திற்கு மிரட்டல் விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.