செய்தியாளர்: ஆனந்தன்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த தனுஷ்கோடி கடல்பகுதி இலங்கைக்கு மிக அருகே உள்ளதால் தனுஷ்கோடி கடல் வழியாக இலங்கைக்கு போதை பொருட்கள் சமீபகாலமாக அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று மாலை நாட்டுப் படகு ஒன்றில் போதைப் பொருட்கள் கடத்தி செல்வதாக இந்திய கடலோர காவல்படைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து தகவலின் பேரில் ஒரு நாட்டுப் படகை நோக்கி கடலோர காவல்படை ரோந்து கப்பல் சென்றுள்ளது. அப்போது நாட்டுப் படகில் இருந்த கஞ்சா, ஐஸ் போதை பொருள் மற்றும் வலி நிவாரணி மாத்திரைகள் அடங்கிய பண்டல்களை தனுஷ்கோடி தலைமன்னார் இடையே நடுக்கடலில் தூக்கி வீசியுள்ளனர்.
இதனை அந்த படகில் இருந்த நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. நாட்டுப் படகில் இருந்து போதைப் பொருட்கள் கடலில் வீசப்பட்ட ஜிபிஎஸ் மார்க் மற்றும் அந்த வீடியோவின் அடிப்படையில் மரைன் போலீசார் கடல் பகுதியில் தொடர் சோதனை மேற்கொண்டு வருவதுடன், கடலில் வீசிய போதை பொருட்கள் கரை ஒதுங்கி உள்ளதா என்றும் கரை ஓரங்களில் தொடர்ந்து சோதனை நடந்தி வருகின்றனர்.
அந்த வீடியோவில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து மரைன் போலீசார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் அந்த வீடியோவை எடுத்த நபர், கடலோர காவல் படை தங்களை துரத்துவதால் பொருட்களை கடலில் வீசியதாக அவரது உரிமையாளரிடம் தெரிவிப்பதற்காக இந்த வீடியோவை எடுத்திருக்கலாம் என்றும் இந்த படகு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த படகாக இருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளதாக பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.