சென்னை புழலில் வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் காவலரிடம் போதை ஆசாமி ரகளையில் ஈடுபட்டார். வழக்குப் பதிவு செய்தால் தண்ணியில்லா காட்டிற்கு மாற்றி விடுவேன் என ஆய்வாளருக்கு மிரட்டல் விடுத்தார்.
சென்னை புழலில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் முகக்கவசம் அணியாமல் வந்த நபரை தடுத்து நிறுத்திய பெண் காவலர், முகக்கவசம் அணியாமல் வந்த அவரிடம் கேள்வி எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த போதை ஆசாமி பெண் காவலரை ஒருமையில் பேசி ரகளையில் ஈடுபட்டார்.
இதனையடுத்து அங்கு பணியில் இருந்த உதவி ஆய்வாளர் இரு சக்கர வாகனத்தின் ஆவணங்களை காட்டுமாறு கேட்டதால் கோபமுற்ற போதை ஆசாமி, தான் சென்னையை சேர்ந்த பிரபல ரவுடி ஒருவரின் நண்பர் என்றும் ஏற்கெனவே பல வழக்குகளை சந்தித்தவன். நான் நினைத்தால் எது வேண்டுமானாலும் செய்ய முடியும் என சவால் விட்டதோடு தன்மீது வழக்குப் பதிவு செய்தால் ஒரு மணி நேரத்தில் காக்கி சீருடையை கழட்டி தண்ணியில்லா காட்டிற்கு மாற்றி விடுவேன் எனவும் மிரட்டல் விடுத்தார்.
இதனையடுத்து அங்குவந்த போக்குவரத்து காவலர்கள் அந்த நபரை சோதனை செய்தபோது அவர், அளவுக்கு அதிகமாக மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அவரிடமிருந்து இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் அந்த நபர், திருவள்ளூர் மாவட்டம் பாடியநல்லூர் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பது தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.