சாலை விபத்துக்களை குறைப்பதற்காகவே அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
லாரி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் டிராபிக் ராமசாமி ஆகியோர் தொடர்ந்த வழக்கில் அசல் உரிமம் கட்டாயம் என மோட்டார் வாகன சட்டத்தில் விதி இல்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் 2017ஆம் ஆண்டு ஜூலை வரை 9,881 பேர் உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், கடந்த 7 மாதங்களில் சாலை விபத்துக்களில் 44,429 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயப்படுத்தப்படுவது விபத்துக்களைக் குறைப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கையே என்றும் ஏற்கனவே உள்ள மோட்டார் வாகனச் சட்ட விதிகள்தான் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்தால் காவல்துறையின் வலைத்தளத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆணையர் தெரிவித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 15ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.