செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வருகிறது.
விபத்துகளை தடுக்க அசல் ஓட்டுநர் உரிமம் அவசியம் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அண்மையில் அறிவித்திருந்தார். இதனை உயர்நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதன்படி, வரும் 1 ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது போக்குவரத்து காவல்துறை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
அசல் ஓட்டுநர் உரிமத்தை எப்போதும் கையில் வைத்திருப்பது சாத்தியமில்லை என்று வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். வாடகை வாகனம் ஓட்டும் கார், ஆட்டோ, லாரி ஓட்டுநர்களுக்கு இந்த புதிய நடைமுறை பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இது தவிர, விபத்து சமயங்களில் அசல் ஓட்டுநர் உரிமத்தைக்காட்டியே காப்பீடு போன்றவற்றை பெற இயலும்,. ஆனால், விபத்தின்போது அசல் ஓட்டுநர் உரிமம் தொலைந்தால், எதைக் கொண்டு இழப்பீடு பெறுவது என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எனினும், தமிழக அரசும், உயர்நீதிமன்றமும் கூறியபடி வரும் 1 ஆம் தேதி முதல் அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.