கல்லூரி பேருந்துடன் ஆற்றின் நடுவே சிக்கிய ஓட்டுநர்; ட்ராக்டர் மூலம் மீட்கப்பட்ட பரிதாபம்

கல்லூரி பேருந்துடன் ஆற்றின் நடுவே சிக்கிய ஓட்டுநர்; ட்ராக்டர் மூலம் மீட்கப்பட்ட பரிதாபம்
கல்லூரி பேருந்துடன் ஆற்றின் நடுவே சிக்கிய ஓட்டுநர்; ட்ராக்டர் மூலம் மீட்கப்பட்ட பரிதாபம்
Published on

ஓமலூர் அருகே தனியார் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு மாணவர்களை அழைத்து சென்ற கல்லூரி பேருந்தொன்று, சரபங்கா ஆற்றில் சிக்கி தவித்துள்ளது. பேருந்து பாதி அளவு தண்ணீரில் மூழ்கியதை தொடர்ந்து, டிராக்டர் வைத்து பேருந்தை தண்ணீரிலிருந்து அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த பூசாரிப்பட்டி பகுதியில் செயல்பட்டுவரும் ஒரு தனியார் கல்லூரியில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்காக ஓமலூரை அடுத்த கருப்பூர், வெள்ளாளப்பட்டி, நாலுக்கால்பாலம், பண்ணப்பட்டி ஆகிய பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகளை அழைத்துக்கொண்டு கல்லூரி பேருந்து கருப்பூர் பகுதியிலிருந்து கல்லூரி நோக்கி சென்றுகொண்டிருந்திருக்கிறது. அப்போது கருப்பூர் பகுதியிலிருந்து வெள்ளாளப்பட்டி வழியாக சக்கரைசெட்டியப்பட்டி, நாலுக்கல்பாலம் வழியாக சென்ற பேருந்து, ஏற்காட்டில் இருந்து ஓமலூர் நோக்கி செல்லும் சரபங்கா ஆற்றில் சிக்கியது. ஆற்றை கடக்க நினைத்து ஓட்டுநர் அவ்வழியாக சென்றதாக கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களாக சேலம் மாவட்டம் ஓமலூர், காடையாம்பட்டி மலைத்தொடரில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், ஏற்காட்டில் இருந்து உருவாகி வரும் சரபங்கா ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதில் சக்கரை செட்டியப்பட்டி வனப்பகுதியை ஒட்டியுள்ள ஏரி நிரம்பி வழிந்தது. அங்கிருந்து தண்ணீரானது நாலுகால்பாலம் வழியாக காமலாபுரம் நோக்கி சென்று கொண்டு உள்ளது. ஆனால் இதுகுறித்து அறியாமல் பேருந்தை ஆற்று வழியே செலுத்த ஓட்டுநர் நினைத்திருக்கிறார்.

ஆற்றில் அதிகமான தண்ணீர் இருந்ததால், பேருந்தின் ஓட்டுனர் நிலைதடுமாறியுள்ளார். அவர் சுதாகரிப்பதற்குள் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பாதி அளவு பேருந்து தண்ணீரில் மூழ்கியுள்ளது. அப்போது பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தண்ணீரில் சிறிது தூரம் இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது. அதன் பிறகு பேருந்து ஓட்டுநர் பேருந்தை இயக்க முடியாமல் நிறுத்தியுள்ளார்.

செய்வதறியாமல் பயத்தில் தவித்துக் கொண்டிருந்த பேருந்து ஓட்டுனரை அருகில் இருந்தவர்கள் பத்திரமாக மீட்டனர். அதன்பிறகு அருகிலிருந்த டிராக்டர் வாகனத்தின் மூலம் ரோப் கயிறு கட்டி பேருந்தை பத்திரமாக தண்ணீரிலிருந்து வெளியே இழுத்தனர். கல்லூரி பேருந்தில் விழாவிற்காக மாணவ மாணவிகள் யாரும் வராததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com