மக்களுக்கு கிடைக்கவேண்டிய குடிநீர் ராட்சத குழாய் கசிவு காரணமாக நீர்வீழ்ச்சி போல் ஆற்றில் வீணாக கொட்டித் தீர்க்கிறது.
கடலூர் நகராட்சி நகரப் பகுதியில் இருக்கும் குடியிருப்புவாசிகளுக்கு குடிநீரானது கேப்பர் மலைப் பகுதியிலிருந்து ராட்சத குழாய் மூலம் கொண்டுவந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ராட்சத குழாய்கள் சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தால் பல இடங்களில் அவ்வப்போது கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாகி பொதுமக்களுக்கு பற்றாக்குறை ஏற்படுகிறது. தற்போது கடலூர் அண்ணா பாலத்தில் செல்லும் ராட்சத குழாய் உடைந்து வினாடிக்கு நூற்றுக்கணக்கான லிட்டர் தண்ணீர் நீர்வீழ்ச்சி போல் ஆற்றில் வீணாகப்போவதால் பொதுமக்களுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இதனை சரிசெய்ய வேண்டிய நகராட்சி நிர்வாகம் பெயருக்கு அந்த ராட்சத குழாயை சாக்கு போட்டு கட்டி வைத்துள்ளது. ஆனாலும் தண்ணீர் தொடர்ந்து ஆற்றில் கொட்டி வருகிறது. குடிநீரை வீணாக்காமல் முறையாக பொதுமக்களுக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொது மக்களின் கோரிக்கையாக உள்ளது.