செய்தியாளர்: சந்;தானகுமார்
சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது. இதில், 2023 - 2024 ஆம் கல்வியாண்டில் நடைபெற்ற சர்வதேச, தேசிய, மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற மாணவ, மாணவியர். 10, 12 ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற தனியார் பள்ளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழா பேருரையாற்றினார்.
அப்போது பேசிய அவர்...
"திராவிட இயக்கத்தில் இருந்து வரும் ஒவ்வொரு தொண்டனுக்கும் படிக்கின்ற மாணவர்களை பார்த்தால் ஒரு மகிழ்ச்சி வரும். தந்தை பெரியார் ஒரு பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு காரில் போய்க்கொண்டிருந்தார். அப்போது அந்த சாலையில் பெண்கள், பள்ளிச் சீருடையுடன் பள்ளிக் கூடத்திற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த பெண் குழந்தைகளை பார்த்து கைதட்டி ரசித்து மகிழ்ந்தார். இதற்குதானே நான் காலம் முழுவதும் போராடினேன், திராவிட இயக்கத்தின் பலனை இதோ என் கண் முன்னாலேயே பார்த்து விட்டேன் என்று மகிழ்ச்சி அடைந்தார்.
மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கியவர் கலைஞர்!
கலைஞர் ஆட்சிக்கு வந்தபோது, மாணவ மாணவிகள் பள்ளிக்கு நடந்து செல்லக் கூடாது என்பதற்காக இலவச பேருந்து அட்டையை வழங்கி, பேருந்தில் போக வைத்தார். பெரியாருக்கும் கலைஞருக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிதான் இன்று இங்கு வந்துள்ள மாணவச் செல்வங்களை பார்க்கும் போது எங்கள் அத்தனை பேருக்கும் ஏற்படுகிறது. இந்த மகிழ்ச்சி தொடர வேண்டும் என்பதுதான் நம்முடைய முதலமைச்சரின் ஒரே லட்சியம். நம்முடைய குழந்தைகள் மருத்துவர்களாக, ஆராய்ச்சியாளராக, அரசு அதிகாரிகளாக பெரிய பொறுப்புகளுக்கு வர வேண்டும் என்பதுதான் திராவிட மாடல் அரசின் ஒரே லட்சியம்.
தனியார் பள்ளிகளில் இருக்கும் அத்தனை வசதிகளும் அரசுப் பள்ளிகளுக்கும் வரவேண்டும்!
அதற்கு ஏற்றவாறு தான் நம்முடைய முதலமைச்சர் பல திட்டங்களை தந்து கொண்டிருக்கிறார். அரசுப் பள்ளி, தனியார் பள்ளி என்று முதலமைச்சர் பிரித்துப் பார்ப்பது கிடையாது. தனியார் பள்ளிகளில் இருக்கும் அத்தனை வசதிகளும் அரசுப் பள்ளிகளுக்கும் வரவேண்டும் என்பதற்காக தான் ஒவ்வொரு திட்டத்தையும் முதலமைச்சர் பார்த்து பார்த்து செய்து கொண்டிருக்கிறார்.
தமிழ்நாடு கல்வியில் முன்னேறிய மாநிலமாக இருக்கிறது என்றால் அதற்காக நம்முடைய திராவிட மாடல் அரசு எடுக்கின்ற நடவடிக்கைகளுக்கு தனியார் பள்ளிகள் அளிக்கும் ஒத்துழைப்பு மிக மிக முக்கியமானது. இன்று பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு கல்லூரிகளில் சேராமல் இருக்கும் மானவர்களை உயர்க் கல்வியில் சேர்க்க வேண்டும் என்பதற்காக நம்முடைய அரசு தனி முயற்சி எடுத்து வருகிறது.
தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன்;
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இந்த அரசு அனைத்து வகைகளிலும் உதவ தயாராக இருக்கிறது. விளையாட்டுத் துறையில் சாதிக்கும் திறமையாளர்களுக்கு உதவிட இந்தியாவில் முதல் முறையாக தமிழ்நாடு அரசு தமிழ்நாடு சாம்பியன்ஸ் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையை தொடங்கி இருக்கிறது. இந்த அறக்கட்டளை மூலம் சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் சாதிக்கின்ற மாணவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையை வழங்கி தமிழ்நாடு அரசு கவுரவப்படுத்தி வருகிறது. இன்று பாராட்டுச் சான்றிதழ் பெற்றுள்ள பள்ளி மாணவர்கள், நாளை தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்களையும் கோப்பைகளையும் பெற வேண்டும் அதற்கு என்னென்ன தேவையோ அதை செய்ய தமிழ்நாடு அரசு தயாராக இருக்கிறது.
தனியார் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கும் திராவிட மாடல் அரசு துணை நிற்கும்:
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி வறுமையில் இருக்கும் குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த சட்டத்தை செயல்படுத்துவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. இந்த சட்டத்தின்படி சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளுக்கு அரசே வழங்க வேண்டும் என்பது சட்டம்., ஆனால், முந்தைய ஆட்சி காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு இந்த தொகை தாமதமாக வழங்கப்பட்டு வந்தது.
திராவிட மாடல அரசு பொறுப்பேற்ற பிறகு சுமார் 1300 கோடி ரூபாயை பள்ளிகளுக்கு வழங்க அரசாணை வெளியிட்டு அந்தப் பணிகள் நடைபெற்று வருகிறது, இனி வரும் கல்வி ஆண்டுகளில் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணம் அந்தந்த ஆண்டு வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அரசுப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு மட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளின் முன்னேற்றத்திற்கும் திராவிட மாடல் அரசு என்றைக்கும் துணை நிற்கும்” என்று அமைச்சர் உதயநிதி பேசினார்.