பெரியார் குறித்து பேசிய விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வலியுறுத்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற்ற துக்ளக் விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் 1971ம் ஆண்டு பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி குறித்து பேசியிருந்தார். ரஜினிகாந்த் பேசியதில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருப்பதாகவும், பெரியார் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அத்துடன், ரஜினிக்கு எதிராக பல்வேறு காவல்நிலையங்களிலும் புகார்கள் அளிக்கப்பட்டன.
மேலும், இன்று ரஜினிக்கு எதிராக பல்வேறு இடங்களில் போராட்டங்களும் நடைபெற்றன. அவருடைய இல்லத்தை முற்றுகையிடவும் திராவிடர் விடுதலை கழகத்தினர் முயற்சி செய்தனர். இதனிடையே, இன்று செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த் 2017 ஆம் ஆண்டு அவுட் லுக் பத்திரிகையில் வந்த செய்தியின் அடிப்படையிலேயே தான் பேசியதாகவும், மன்னிப்பு கேட்க முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், பெரியார் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலை கழகத்தின் சென்னை மாவட்டச் செயலாளர் உமாபதி சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில், “பெரியார் குறித்து பேசியதாக ரஜினிகாந்த் மீது சென்னை திருவல்லிக்கேணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். ஆனால், தங்கள் புகார் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே தங்கள் புகாரில் ரஜினி மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.