‘பொய்யான தகவல்களை பரப்புகிறார்’ - ரஜினி மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் போலீசில் புகார்

‘பொய்யான தகவல்களை பரப்புகிறார்’ - ரஜினி மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் போலீசில் புகார்
‘பொய்யான தகவல்களை பரப்புகிறார்’ - ரஜினி மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் போலீசில் புகார்
Published on

தந்தை பெரியார் பற்றி அவதூறு மற்றும் வதந்தியை பரப்பி பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசியதாக நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலை கழகத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

துக்ளக் இதழின் 50-ஆம் ஆண்டு நிறைவு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற்றது. இதில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அந்த விழாவில் பேசிய ரஜினி, தமிழக அளவில் சோ பிரபலமாவதற்கு தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான பக்தவச்சலம் மற்றும் கருணாநிதி எடுத்த நடவடிக்கைகள் காரணமாக இருந்ததாக கூறினார். அதற்கு சில உதாரணங்களாக சிலவற்றை எடுத்துக் கூறினார்.

அதில், சேலத்தில் பெரியார் தலைமையில் நடைபெற்ற மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணியை ஒட்டி நடைபெற்ற சம்பவத்தை குறிப்பிட்டார். அந்த நிகழ்ச்சியில், ராமர் - சீதையின் ஆடையில்லா படங்கள் செருப்பு மாலையுடன் இடம்பெற்றதாகவும், இந்த சம்பவத்தை வேறு பத்திரிகைகள் வெளியிடாத நிலையில் துக்ளக் இதழில் சோ துணிச்சலாக பிரசுரம் செய்ததாகவும் கூறினார். அந்த இதழை அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி சீஸ் செய்ததாகவும், இருப்பினும் சோ பின்னர் வெளியிட்டபோது பிளாக்கில் அதிக விலைக்கே விற்கப்பட்டதாகவும் கூறினார்.

ரஜினி கூறிய இந்த செய்தியில் பல்வேறு தகவல் பிழைகள் இருப்பதாக பலரும் மறுப்பு செய்தி வெளியிட்டு வருகின்றனர். குறிப்பாக, அந்தப் பேரணியில் ராமர் - சீதையின் ஆடையில்லா படம் இடம்பெறவே இல்லை என்று கூறியுள்ளனர். இந்நிலையில், பெரியார் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவதூறு மற்றும் வதந்தியை பரப்பி பொது அமைதியை குலைக்கும் வகையில் நடிகர் ரஜினிகாந்த் பேசியதாகவும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது..

‘1971 ஆம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியில் ராமன், சீதை ஆகியோர் உருவங்கள் நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டதாக அப்பட்டமான பொய்யை நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் வதந்தியை பரப்பி பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மீது இந்திய தண்டனைச் சட்டம் ஐ.பி.சி. 153A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com