எதிர்பாத்தபடியே, அமைப்பின் பெயரையும் கொடியையும் அறிமுகப்படுத்தி விட்டார் டிடிவி தினகரன். கூடவே சர்ச்சைகளும் விவாதங்களும் கிளம்பி இருக்கிறது.
ஆர். கே. நகரில் வென்று எம்எல்ஏவான டிடிவி தினகரன், தனிக் கட்சி திட்டத்தை முதலில் யோசித்தார். இதை அவருடன் இருப்பவர்களே ஏற்கவில்லை. அதிமுகவை கைப்பற்றுவதே நோக்கம் என்று கூறினர். இதையடுத்து தனது முடிவை மாற்றினார் டிடிவி. புதிய கட்சியல்ல, புதிய அமைப்பு என்று அதிரடி கொடுத்தார்.
அவர் சொன்ன படி, மதுரை மேலூரில், ஏகப்பட்ட ஆதரவாளர்களுக்கு இடையே, ’அம்மா மக்கள் முன்னேற்றக் கழக’த்தையும் (அமமுக) கருப்பு வெள்ளை, சிவப்பு நிறங்களின் நடுவே ஜெயலலிதா உருவம் கொண்ட கொடியையும் இன்று அறிமுகப்படுத்தப்படுத்தி விட்டார். கூடவே இரட்டை இலையையும், அதிமுகவையும் மீட்கும் வரை இந்த பெயரில் செயல்படுவோம் என்று கூறியிருக்கிறார்.
‘அதிமுகவை கைப்பற்றும் நோக்கத்தில் இருக்கும் டிடிவி தினகரன், அந்தக் கட்சியை ஆரம்பித்த எம்.ஜி.ஆரையும் கட்சியின் வேரான திராவிடத்தையும் மறந்தது ஏன்?’ என்று கொதிக்க ஆரம்பித்திருக்கிறார்கள் எம்.ஜி.ஆர் பக்தர்கள். அதே நேரத்தில், எம்.ஜி.ஆரை வைத்து இனி அரசியல் செய்வது கஷ்டம் என்பதால் ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி டிடிவி களத்தில் இறங்கிவிட்டார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.