தருமபுரி அரசு மகளிர் மேல் நிலை பள்ளி அருகே கழிவு நீர் தேங்கி தூர்நாற்றம் வீசுவதால், வகுப்பறையில் மாணவிகள் மூக்கை பொத்திக் கொண்டு படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் மேல்நிலை பள்ளியில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு தலைமையாசிரியர் உட்பட 120 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 95 வகுப்பறை கட்டிடங்கள் தேவைப்படும் நிலையில், 77 வகுப்பறை கட்டடங்கள் மட்டுமே இருக்கிறது.
இந்நிலையில் பள்ளிக்கு அருகே பொதுப்பணி துறைக்கு சொந்தமான கால்வாய் செல்கிறது. இந்த கால்வாயில் சில நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் கசிந்து வருகிறது. மாணவிகள் படிக்கும் வகுப்பறைக்கு அருகே கழிவுநீர் தேங்கியுள்ளதால் கடுமையான தூர்நாற்றம் வீசுகிறது.
இதனால் வகுப்பறைகளில் மாணவிகள் அமர்ந்து படிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மாணவிகள் மூக்கை பொத்திக் கொண்டு படிக்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த தூர்நாற்றத்தால் சில மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகிறது. இதனால் பள்ளிக்கு வரமுடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறையிடம் பல முறை புகார் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே கழிவுநீர் தேங்காமல் கால்வாயை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.