சென்னையில் முழு பொதுமுடக்கம் முடிவடைந்து நாளை முதல் தளர்வுகள் அமலுக்கு வருகின்றன.
சென்னையில் கொரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டிருந்த முழு பொதுமுடக்கம் இன்று நள்ளிரவு முடிவடைந்து, புதிய தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படவுள்ளன. அதன்படி, நாளை முதல் சென்னைப் பகுதிகளில் இயங்கும் உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கலாம். ஆனால் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே இயங்க வேண்டும். பார்சல்க்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காய்கறிக் கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி இயங்கலாம் எனப்பட்டுள்ளது. வணிக வளாகங்கள் (Malls) தவிர்த்து அனைத்து தனிக்கடைகள் மற்றும் பெரிய கடைகள் ( நகை, ஜவுளி போன்றவை) முன்னதாக அறிவுறுத்தப்பட்டுள்ள வழிமுறைகளுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தளர்வுகளின்போது சென்னை மக்கள் கடைபிடிக்க வேண்டியவற்றை மருத்துவர், சமூக ஆர்வலருமான சுமந்த் சி ராமன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில், நாளை முதல் சென்னையில் தளர்வுகள். ஆனால் நாம் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
1. முகக்கவசம் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள்
2. முகக்கவசம் மூக்கையும், வாயையும் முழுமையாக மூடியபடி அணியவும்
3. நீங்கள் நுழையும் கடைகளில் முகக்கவசம் இல்லாமல் யாரேனும் இருந்தால் அவர்களை அணிய சொல்லுங்கள். மறுத்தால் அந்த கடையிலிருந்து உடனே சென்றுவிடுங்கள். கடைக்காரர்கள் முகக்கவசம் அணியவில்லை என்றால் அங்கு செல்வதை தவிர்த்துவிடுங்கள்.
4. பில்லிங் இடத்தில் கூட்டம் போடாதீர்கள். ஒருவரின் பின் ஒருவர் என தனிமனித இடைவெளி விட்டு நில்லுங்கள்.
5. எவருடனும் கை குலுக்குவதை தவிருங்கள்.
6. முகக்கவசம் அணிய சொல்வதற்கோ, சமூக இடைவெளி பின்பற்ற சொல்வதற்கோ கூச்சப்படாதீர்கள்.
உங்கள் நண்பனாக இருந்தாலும், உறவினராக இருந்தாலும் சரி, சங்கோஜப்பட வேண்டாம்.
7. கைப்பையிலோ , வண்டியிலோ சானிடைசர் (sanitizer) பாட்டில் வைத்து அடிக்கடி கைகளை சுத்தபடுத்திக்கொள்ளுங்கள்.
8. தேவை இல்லாமல் வீட்டை விட்டு வெளியே போகாதீர்கள்.
9. வீட்டுக்கு திரும்பி வந்தவுடன் துணிகளை அகற்றி தலை உட்பட முழுமையாக குளியுங்கள்.
10. கழற்றிய துணிகளை மறு நாள் காலை வரை தொடாதீர்கள்.
11. முதியோர்கள் வீட்டில் இருந்தால், வெளியே செல்பவர்கள் அவர்களுடன் நெருக்கமாக பழகுவதை சில வாரங்களுக்கு தவிர்த்துவிடுங்கள்.
12. எவரேனும் இதை எல்லாம் நீங்கள் செய்வதற்கு உங்களை கிண்டல் செய்தல் அதை பொருட்படுத்தாதீர்கள்.
நம் சென்னையை கொரோனா நோய் தாக்கத்திலிருந்து காப்பது நம் கடமை. ஒத்துழைப்போம் அரசுடன். முறியடிப்போம் கொரோனவை என்று சுமந்த் சி ராமன் குறிப்பிட்டுள்ளார்.