தமிழ்நாட்டின் தென்னகத்தே உள்ள கடற்கரை மாவட்டமான ராமேஸ்வரத்தில் ஒரு ஏழைக் குடும்பத்தில் பிறந்து, அறிவியல் அறிவால் உலகையே அசர வைத்து, இந்தியாவின் முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் பதவியையும் சிறப்பாக அலங்கரித்து இந்தாளும், எந்தாளும் இளைஞர்களின் மனதில் தன்னம்பிக்கை நாயகனாக திகழும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவுதினம் இன்று. அப்துல்கலாமின் அறிவியல் அறிவை, எளிமையை, இளைஞர்கள் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கையை, தமிழ் மீது அவர் கொண்டிருந்த அளவுக் கடந்த பற்றை விவரிக்க ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு சில விஷயங்களை பற்றி மட்டும் இங்கே காண்போம்.
•எளிமை•
தமிழ்நாட்டில் நிகழ்ச்சி ஒன்று நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் பங்கேற்க அதிகாரிகள் புடைசூழ அழைத்து வரப்படுகிறார் அப்துல் கலாம். விழா மேடையிலோ வரிசையாக நாற்காலிகள் இருக்கின்றன. அதில் நடுவாக போடப்பட்டிருக்கும் நாற்காலி மட்டும் மற்ற நாற்காலிகளைவிட சிறப்பானதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மேடை ஏறும்போதே, சாதாரண நாற்காலியில் அமர முயலும் அப்துல் கலாமிடம், அதிகாரிகள் அவருக்கான பிரத்யேக நாற்காலியில் இருக்குமாறு கூறுகிறார்கள். ஆனால் அதை ஏற்க மறுக்கும் அப்துல் கலாம், அந்த நாற்காலியை அகற்றுமாறு கூறுவார். தொடர்ந்து எல்லோருக்கும்போல சாதாரண நாற்காலிலேயே அமர்வார். சாதாரணமாக ஒரு கவுன்சிலர் கூட்டம் என்றால்கூட, ‘நான்தான் தலைவன்’ எனக்கு சிறப்பு சலுகை வேண்டும் என எதிர்பார்க்கிற பலபேர் இருக்கிற இன்றைய உலகில், அப்துல் கலாம் செய்த செயல் பார்க்க சிறியது போன்றுதான் தெரியும். ஆனால் உண்மையில் அவரிடம் இருந்த எளிமையை, பணிவை காட்டும் உன்னதாக சம்பவம் அது.
•முடியாது என சொல்லும் வியாதி•
“நம் நாட்டில் எதை சொன்னாலும் முடியாது என சொல்கின்ற வியாதி இருக்கிறது.
கரிகாலன் முடியாது என சொன்னால் கல்லணை வந்திருக்குமா?
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால் இன்று நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்குமா?
சி.சுப்பிரமணியம், எம்.எஸ்.சுவாமிநாதன் முடியாது என நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்க முடியுமா?”
ஆனால் இன்றோ எதற்கெடுத்தாலும் முடியாது என சொல்லும் வியாதி நம் நாட்டில் பல பேரிடம் இருக்கிறது. இளைஞர்கள் எதையும் சாதிக்கக்கூடியவர்கள். ‘எதையும் என்னால் சாதிக்க முடியும்’என்று சொல்லும் கோடிக்கணக்கான இளைஞர்களின் தன்னம்பிக்கையுடன், மூத்தோர்களின் நல்வழிக்காட்டியும் கிடைக்கும்பட்சத்தில் இளைஞர்களால் இன்னும் அழகாக ஜொலிக்க முடியும் என்கிறார் அப்துல் கலாம். சிறிய தோல்விகளை கூட தாங்கிக் கொள்ள இயலாத இன்றைய இளைஞர்களுக்கான எத்தனை தன்னம்பிக்கை வார்த்தை இது.
திருப்திகரமான கண்டுபிடிப்பு
போலியோவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக எடையிலான செயற்கைக்கால்களுடன், நடக்க முடியாமல் நடப்பதை கவனித்த அப்துல் கலாம் அவர்கள், அவர்களுக்காகவே எடை குறைவிலான செயற்கைக் கால்களை தயாரிக்க நினைத்தார். அதனை சிறப்பாக செய்தும் முடித்தார். இதனாலேயே 4 கிலோ என்ற அளவில் இருந்த செயற்கைக் கால்களின் எடையானது, வெறும் 400 கிராம் என்றானது. இது மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் வரப்பிரசாதமாக அமைந்தது. தனது வாழ்க்கையில் எத்தனையோ அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்திருந்தாலும், மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கைக்கால் கண்டுபிடிப்பே திருப்திகரமாக அமைந்தது என்று மனம் குளிர்கிறார் அப்துல் கலாம்
தோல்வி
இப்போது ஏகப்பட்ட இளைஞர்கள் தோல்வியை சமாளிக்க முடியாமல் தடுமாடுகிறார்கள்... அவர்களுக்காகவே முத்தான வார்த்தைகளை உதித்திருக்கிறார் அப்துல் கலாம்.. அவர் சொன்னது இங்கே.. ‘இங்கே எந்தவொரு விஷயத்தை நாம் செய்தாலும் அங்கே பிரச்னைகள், தோல்விகள் வருவது இயல்பு... ஆனால் பிரச்னைகளோ, தோல்விகளோ எந்தவொரு தனிப்பட்ட நபரை ஆட்கொள்ளும் தலைமையான விஷயமாக இருக்கக்கூடாது.. அந்த பிரச்னைகளை தோற்கடித்து அதில் நீங்களே வெற்றியாளராக, தலைமையாளராக இருக்க வேண்டும் என்கிறார்.
திருமணம் என்ன அவ்வளவு பெரிய விஷயமா?
கடைசி வரை நாட்டுக்காக வாழ்ந்தவர், திருமண பந்தத்தில் இணையவில்லை. இது குறித்து ஒருமுறை அவரிடம் கேட்டபோது... எங்க குடும்பம் பெரிய குடும்பம்.. அதோடு கூட்டுக் குடும்பமும்கூட. ஒரே நேரத்தில் மூன்று தொட்டில்கள் ஆடுகிற அளவுக்கான பெரிய குடும்பம்.. என் அண்ணனுக்கு ஒரு பேரன் இருக்கிறார்.. அந்த பேரனுக்கே ஒரு பேத்தி இருக்கிறார். அதாவது என் அண்ணனின் கொள்ளுப் பேத்தி. அந்தளவுக்கான ஒரு பெரிய குடும்பத்தில், நான் மட்டும் திருமணம் செய்யவில்லை என்றால் ஒன்றும் ஆகப்போவதில்லை என சாதாரணமாக பதிலளித்தவர் அப்துல் கலாம்.
ஒரு மரமோ, தோப்போ உருவாவது ஒரு விதையில்தான்.. இங்கே விதைதான் முக்கியமே தவிர தோப்பு முக்கியம்லல. அப்படிப்பட்ட விதையாக ஏகப்பட்ட இளைஞர்களுக்கு இன்றும் இருப்பது அப்துல் கலாமின் வார்த்தைகள் என்றால் மறுப்பதிற்கில்லை.