டக்ளஸுக்கு எதிரான கொலை வழக்கு: காவல் ஆய்வாளருக்கு எதிராக வாரண்ட்

டக்ளஸுக்கு எதிரான கொலை வழக்கு: காவல் ஆய்வாளருக்கு எதிராக வாரண்ட்
டக்ளஸுக்கு எதிரான கொலை வழக்கு: காவல் ஆய்வாளருக்கு எதிராக வாரண்ட்
Published on

இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு எதிரான கொலை வழக்கில், சாட்சிகளை நேரில் ஆஜர்படுத்தாத சூளைமேடு காவல் ஆய்வாளருக்கு எதிராக வாரண்ட் பிறப்பித்து சென்னை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1986-ஆம் ஆண்டு நவம்பர் 1-ஆம் தேதி சென்னை சூளைமேடு பகுதியில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் திருநாவுக்கரசு பலியானதுடன், 4 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக ஈழமக்கள் புரட்சிகர முன்னேற்ற முன்னணியை சேர்ந்த டக்லஸ் தேவானந்தா உள்ளிட்ட பத்து பேர் மீது சூளைமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை 4வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தபோது, 1993-ஆம் ஆண்டு டக்லஸ் தேவானந்தா தலைமறைவானதுடன், இலங்கை அரசாங்கத்தில் அமைச்சரானார்.

பின்னர், தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டும் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்து, காணொலி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜராகலாம் என்று உத்தரவு பெற்றார். இதனிடையே, 30 ஆண்டுகளாக வழக்கு நிலுவையில் இருப்பதாலும், பெரும்பாலான சாட்சியங்கள் தலைமறைவாகி விட்டதாகவும், மீதமிருக்கும் இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்டோரிடம் தனித்தனியாக விசாரணை நடத்த வேண்டும் என சூளைமேடு காவல் ஆய்வாளர் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை நீதிபதி சாந்தி ஏற்றுக்கொண்டு, நேரிலோ அல்லது இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்திலிருந்து காணொலி காட்சி மூலமோ ஆஜராக உத்தரவிட்டார். அதன்படி 29 ஆண்டுகளுக்கு பின்னர் மூன்றாவது குற்றவாளியாக உள்ள டக்ளஸ் தேவானந்தா காணொளி காட்சி மூலம் இலங்கையிலிருந்து ஆஜரானார். அதன்பின்னர் வழக்கில் காவல்துறை தரப்பு சாட்சியங்களின் பதிவு நடைபெற்றது.

பின்னர் சம்பவத்தின் போது கைப்பற்றப்பட்ட பொருட்களையும், அது தொடர்பான பதிவேடுகளையும், அவற்றிற்கு சாட்சிகளாக இருந்தவர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில்  இன்று மீண்டும் நீதிபதி எம்.சாந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது  சாட்சிகளை விசாரணை அதிகாரியான சூளைமேடு காவல் ஆய்வாளர் நேரில் ஆஜார்படுத்தவில்லை. அப்போது,, வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுமில்லை. சாட்சி விசாரணைக்கு காவல்துறை சரியாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என அரசு வக்கீல் பிரபாவதி குற்றச்சாட்டு தெரிவித்தார். இதனை ஏற்ற நீதிபதி, சாட்சிகளை ஆஜர்படுத்தாத சூளைமேடு ஆய்வாளருக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com