சமீப காலமாக குழந்தை கடத்தல் தொடர்பான வீடியோக்களும், செய்திகளும் சமூக வலைதளங்களில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது. இதனால், இவர்தான் சமூக வலைதளத்தில் கண்ட குழந்தை கடத்தும் நபர் என்று எண்ணி அப்பாவிகளை கட்டி வைத்து அடிக்கும் சம்பவமும் நடக்கிறது. இந்நிலையில் இது தொடர்பான வீடியோக்களை நம்ப வேண்டால் என்று காவல் துறை தரப்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஆகவே, மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களின் நடந்த குழந்தை கடத்தல் தொடர்பான செய்திகளையும், அதற்கு காவல் துறை தரப்பில் இருந்து அளிக்கப்படும் நடவடிக்கை என்னவென்று இத்தொகுப்பில் பார்க்கலாம்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பாலப்பாளையம் பகுதியில் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வடக்கு தெரு பகுதியில் வடமாநில தொழிலாளி ஒருவர் சந்தேகத்திற்கு இனமாக சுற்றித்திரிந்ததாக தெரிய வருகிறது. கிராம மக்கள் திருடன் என நினைத்து வட மாநில தொழிலாளியை அடித்து அங்குள்ள கம்பத்தில் கட்டி வைத்துள்ளனர். இதனை அறிந்த காவல்துறை சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் இது குறித்து மக்களிடம் கேட்டதற்கு,
வடமாநில தொழிலாளி அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்று கை குழந்தையை தூக்கிச் செல்ல முயன்றதாகவும், பெண் குழந்தை ஒருவரை கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த இருசக்கர வாகனங்களை உடைக்க முயன்ற போது அதனை தட்டி கேட்ட நபரை வடமாநில தொழிலாளி தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தொழிலாளியை மீட்ட காவல்துறையினர் இந்த சம்பவம் உண்மைதான என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கும்பகோணம் உட்கோட்டம் சுவாமிமலை காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட நாகக்குடி கடைவீதி கிராமத்தில் 05-03-24 அன்று இரவு 21.30 மணிக்கு குடிபோதையில் சற்றே மனநலம் குன்றிய ஒருவர் பொதுமக்களிடம் அவதூறாக பேசிய காரணத்தினால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மேலும் இந்த சம்பவத்தின்போது எடுக்கப்பட்ட வீடியோவை குழந்தை கடத்தல் பற்றிய வீடியோ என்று “நம்ம ஊரு கும்பகோணம்” என்ற முகநூலில் பொய்யாக சித்தரித்து பதிவிட்டவிரின் மீது சுவாமிமலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளபட்டு வருகிறது.
எனவே இதுபோன்று யாரும் குழந்தைக் கடத்தல் தொடர்பான பொய்யான செய்தியை சமுக வலைதளத்தில் பரப்ப வேண்டாம். அவ்வாறு பகிர்பவர்கள்மீதும், குழந்தை கடத்தல் தொடர்பாக வரும் வதந்திகளை நம்பி, சந்தேக நபர்களை தாக்குதல் போன்ற குற்ற சம்பவத்தில் ஈடுபடுவர்கள்மீதும் சட்டரீதியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
மேலும் குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்தி மற்றும் ஏதேனும் சந்தேகம் இருந்தால் உடனடியாக அவசர உதவி எண் 100 க்கு தொடர்பு கொள்ளவும் அல்லது தஞ்சாவூர் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 04362- 277009 / 94981-81221 என்ற எண்ணிலோ அல்லது அருகில் உள்ள காவல் நிலையத்தையோ தொடர்பு கொள்ளலாம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட காவல்துறையின் சார்பில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வதந்திகளை நம்ப வேண்டாம் என்பது குறித்த அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதில் ”வடமாநிலத்தவர்கள் குழந்தைகளை கடத்த முயற்சிப்பதாக சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்கள் பரவி வருகிறது. இவை மக்களிடையே பீதியையும் அச்சத்தை ஏற்படுத்துவதோடு சமூக ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் பரப்பி வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் இதுபோன்ற வீடியோக்கள் மூலம் அச்சமோ பதட்டமோ அடைய வேண்டாம். சந்தேகம் அல்லது உதவி தேவைப்பட்டால் 94981 01210 அல்லது 100 அழைக்கலாம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதுபோன்ற போலியான வீடியோக்களை பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவஹர்,அவ்வாறு செயல்படுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.” என தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் குழந்தை கடத்த வந்த நபரை பொதுமக்கள் பிடித்து அடித்து போலீசாரிடம் ஒப்படைத்ததாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்பப்பட்ட நிலையில் இதுகுறித்து இன்று மன்னார்குடி காவல் நிலையத்திற்கு வருகை தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் புதிய தலைமுறைக்கு பேட்டி அளித்தார்.
அதில், “குழந்தை கடத்தல் சம்பவங்கள் தமிழகத்தில் எந்த பகுதியிலும் நடைபெறவில்லை. கடந்த ஓரிரு நாட்களாக குழந்தை கடத்தல் தொடர்பான வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது. தமிழகத்தில் திருவண்ணாமலை, விழுப்புரம், தஞ்சை, சேலம்,திருவாரூர் மாவட்டங்களில் குழந்தை கடத்தல் தொடர்பாக வதந்திகளை பரப்பிய நண்பர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
தமிழகம் முழுவதும் பணிபுரிந்து வரும் வடமாநில தொழிலாளர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் உணவகங்கள் திரையரங்குகள் சாலை பணிகள் என பலவித தொழில்கள் செய்வதற்காக சுமார் 1070 வட மாநில தொழிலாளர்கள் இங்கு வந்து பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் இரவு பகலென 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். எனவே வட மாநில தொழிலாளர்கள் யாரும் குழந்தை கடத்தல் தொழிலில் ஈடுபடவில்லை.
எனவே வட மாநில தொழிலாளர்கள் அச்சப்பட தேவையில்லை. சிலர் தேவையில்லாத பீதியை கிளப்புகின்றனர். பொதுமக்களுக்கு சந்தேகம் அல்லது அச்சம் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தை தொடர்பு கொள்ள வேண்டும். திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆன என்னுடைய 9952022205 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கலாம்.” என்று தெரிவித்துள்ளார்.
ஆகவே குழந்தை கடத்தல் தொடர்பான போலி செய்திகளை நம்ப வேண்டாம் என்றும் உதவி எண்களும் காவல் துறை தரப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.