ரத்தக் குருத்தணு கொடுத்து உயிரைக் காத்த கோவை இளைஞர்

ரத்தக் குருத்தணு கொடுத்து உயிரைக் காத்த கோவை இளைஞர்
ரத்தக் குருத்தணு கொடுத்து உயிரைக் காத்த கோவை இளைஞர்
Published on

பிரதிபலன் எதிர்ப்பார்க்காமல் செய்யப்படும் உதவிக்கு ஈடு இணை கிடையாது என்பதை மெய்ப்பித்து காண்பித்துள்ளார் கோவையைச் சேர்ந்த மெக்கானிக் குருமூர்த்தி.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட டெல்லி பெண் உயிரைக் காத்து ஸ்டெம் செல் தானமாக வழங்கி மறுவாழ்விற்கு வழிவகுத்த கோவை இளைஞர் ஒருவர். டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவன மனிதவளத்துறையில் பணியாற்றி வந்த கரீமா சரஸ்வத் (34) என்ற பெண் ஒருவகை ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருந்துள்ளார். பல்வேறு சிகிச்சை மேற்கொண்டும் குணமாகாமல் இருந்து வந்த நிலையில், ரத்தக் குருத்தணுக்கள் மாற்று அறுவை சிகிச்சை மூலம் உயிரைக் காப்பாற்ற முடிவு செய்து, தனியார் அமைப்பு மூலம் ஸ்டெம் செல் கொடையாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இதில், கோவை சிங்காநல்லூர் அருகே உப்பிலிப்பாளையத்தை சேர்ந்த கார் மெக்கானிக் குருமூர்த்தி (29) என்பவரது ஸ்டெம் செல் பொருந்தியது அடுத்து, பல்வேறு பரிசோதனைகளுக்கு பிறகு குருமூர்த்தியின் ஸ்டெம் செல் கரீமாவுக்கு தானமாக வழங்கப்பட்டது. இதனால், முழுமையாக குணமடைந்து மீண்டும் வாழ்வை துவக்கியுள்ளார் கரீமா. 

மனித உடலில் நமது ஆரோக்கியத்துக்கு தேவையான நூற்றுக்கணக்கான வகை உயிரணுக்களில் ஒருவகையான அணு, ஸ்டெம் செல் எனப்படும் குருத்தணு. பிற அனைத்து உயிரணுக்களையும் உருவாக்கும் பொறுப்புள்ள இந்தக் குருத்தணுக்கள் பெருகும்போது அவை மேலும் பல குருத்தணுக்களையோ அல்லது வேறுவகை உயிரணுக்களையோ உருவாக்கும். 10ஆயிரத்திலிருந்து 2 லட்சம் பேரில் ஒருவரிடம் இருந்துதான் பொருத்தமான ஸ்டெம் செல் கிடைக்கும் நிலை தற்போது உள்ளதாகவும்,  ரத்தம் தொடர்புடைய உடல் பாதிப்புகள், தலசீமியா போன்ற நோய்களுக்கு முழுமையான தீர்வாகவுள்ள இந்த ஸ்டெம் செல் சிகிச்சை குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாகவும் கூறும் ஸ்டெம் செல் விழிப்புணர்வில் ஈடுபட்டுள்ளவர்கள்,  அவ்வாறு செய்யும் போது அதில் உள்ள சிக்கல்கள் தாமாகவே களையப்படும் என்கின்றனர்.

தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட உறவுக்கார பெண்ணுக்காக ஸ்டெம் செல் தானமாக  வழங்கிய நிலையில், யாரோ எங்கோ இருந்தவருக்கு என்னுடைய ஸ்டெம் செல் பயன்பட்டது என்பது மிகுந்த மகிழ்ச்சியையும், வாழ்நாள் பயனை அடைந்த மனநிறைவையும் தந்ததாக நெகிழ்கிறார் குருமூர்த்தி.

தகவல்கள்: ஐஸ்வர்யா, செய்தியாளர் - கோவை 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com