சாத்தான்குளத்தில் மூன்று மாதங்களுக்குப் பிறகு பென்னிக்ஸ் மொபைல் கடை இன்று திறக்கப்பட்டது. அவர் வளர்த்த நாய் டாமி தனது வளர்ப்பாளரான பென்னிக்ஸை தேடி கடைக்கு வந்து காத்திருந்தது காண்போரை கண்கலங்க வைத்தது.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல் நிலைய விசாரணையின் போது தந்தை மகன் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரம் தமிழகம் மட்டுமின்றி இந்திய அளவில் காவல்துறைக்கு எதிரான மிகப்பெரிய களங்கமாக மக்களால் பார்க்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 19 ம் தேதி ஊரடங்கு பொது முடக்க விதிகளை மீறி கடை திறந்து இருந்ததாக கூறி சாத்தான்குளத்தில் மொபைல் கடை நடத்தி வந்த மகன் பென்னிக்ஸ் மற்றும் தந்தை ஜெயராஜ் இருவரையும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த சாத்தான்குளம் போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று இரவு முழுக்க கடுமையாக தாக்கியதில் அடுத்தடுத்த நாட்களில் மகன் பென்னிக்ஸ் மற்றும் தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.
உறவினர்கள், ஊர்மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து வழக்கை பதிவு செய்தது. சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து காவல் ஆய்வாளர்,உதவி காவல் ஆய்வாளர் உட்பட 10 காவலர்களை கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சிபிஐ இந்த வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர். தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரின் மீது போடப்பட்ட FIR பொய்யாக ஜோடிக்கப்பட்டது என நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
இதனிடையே கடந்த ஜூன் 19-ஆம் தேதி மூடப்பட்ட பென்னிக்ஸின் மொபைல் ஷோரூம் இன்று அவரது உறவினரும் தம்பியுமான இம்ரான் என்பவரால் திறக்கப்பட்டது. இது அப்பகுதி மக்களிடையே மீண்டும் பென்னிக்ஸ், ஜெயராஜ் குறித்த நினைவுகளை மீண்டு எழ செய்துள்ளது.
பென்னிக்ஸ் கடை திறக்கப்பட்டதும், பென்னிக்ஸ் வீட்டில் ஆறு வருடமாக பாசமாக வளர்த்த அவரது நாய் டாமி மொபைல் கடை உள்ளே சென்று அவரை தேடி விட்டு பின் வாசலில் வந்து படுத்துக் கொண்டது. கடையை விட்டு நகராமல் தன் வளர்ப்பாளரான பென்னிக்சுக்காக காத்திருக்கிறது. இதை கண்ட அப்பகுதி மக்கள் நாயின் பாச உணர்வை கண்டு வியப்படைந்தனர்.