மயிலாடுதுறை மாவட்டத்தில் முதல் முறையாக நடைபெற்ற நாய்கள் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
மயிலாடுதுறையில் செய்தி விளம்பரம் மற்றும் மக்கள் தொடர்புத் துறை சார்பில் அரசின் சாதனை விளக்க கண்காட்சி கடந்த 15ஆம் தேதி துவங்கியது. இந்த விழாவின் ஒரு பகுதியாக நேற்று கால்நடை பராமரிப்புத் துறை சார்பாக வளர்ப்பு நாய் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை தனது குடும்பத்தினருடன் வந்திருந்த மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் துவங்கி வைத்தனர்.
இந்த நாய் கண்காட்சியில் மயிலாடுதுறை மாவட்டம் மட்டுமன்றி திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த மொத்தம் 52 நாய்கள் பங்கேற்றன. கிரேடன், ஈரோப்பியன் டாபர்மேன், ப்ளூ டன் சிப்பி பாறை, கன்னி, பீகில், மின்பின், டேஸ் உள்ளிட்ட பல்வேறு வகையான நாய்கள் பங்கேற்றன. நாய்கள் அணிவகுத்து வந்த நிலையில், கம்பீரம் ஒய்யாரம் கட்டளைக்கு கீழ்ப்படிதல் உள்ளிட்ட பிரிவுகளில் நாய்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன.
இதில் திருவாரூரைச் சேர்ந்த நாய் முதல் இடத்தை பிடித்தது. மயிலாடுதுறைச் சேர்ந்த நாய் மூன்றாம் இடத்தை பிடித்தது. பல்வேறு பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த நாய்களுக்கு பரிசுகளை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா ஆகியோர் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அனைத்து செல்லப் பிராணிகளையும் தலையை வருடி விட்டும் காது மடல்களை பிடித்தும் பழக்கப்படுத்தி நாயின் குணாதிசயங்களை கேட்டறிந்து மகிழ்ச்சி அடைந்தார்.
இதே போல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா, நாயை தூக்கி கொஞ்சி உற்சாகமடைந்தார். ஏராளமான பார்வையாளர்கள் நாயுடன் ஆர்வாக செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த கண்காட்சியில் கோட்டாட்சியர் யுரேகா மற்றும் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.