EXCLUSIVE | தமிழ்நாடு அரசு அறிவிக்கும் திட்டங்கள் மத்திய அரசுடையதா? ஆதாரங்களுடன் மறுக்கும் திமுக!

திமுக நிதிநிலை அறிக்கையில் அறிவித்த திட்டங்கள் மத்திய அரசின் திட்டங்கள் என பாஜக கூறும் நிலையில் திமுக செய்தித் தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தியிடம் இதுகுறித்து கேட்டோம்.
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்pt web
Published on

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டை கடந்த 19 ஆம் தேதி தாக்கல் செய்தார். நிதிநிலை அறிக்கைகையில் பல்வேறு வகையான திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தன. ஆனால் அவ்வாறு அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் மத்திய அரசின் திட்டங்கள் என பாஜகவினர் கூறினர். மத்திய அரசின் திட்டங்களின் பெயர்களை மாற்றி தமிழக சட்டமன்றத்தில் திமுக அறிவிப்பதாக குற்றம் சாட்டியிருந்தனர்.

தொடர்ந்து நேற்று பிரதமர் நெல்லையில் பேசியிருந்தார். அவரும் திமுக அரசை கடுமையாக சாடியிருந்தார். தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டுவரும் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன என்ற முக்கியமான குற்றச்சாட்டை பிரதமரேவும் வைத்திருந்தார்.

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்
“தமிழ்நாட்டில் மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் மறைக்கப்படுகின்றன!” - பிரதமர் மோடி பேச்சு
இதையடுத்து இதுதொடர்பான உரையாடல்கள் இன்னும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து திமுக செய்தித் தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தியை தொடர்பு கொண்டோம். அவர் கூறுகையில்,

“ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு மாநில அரசு லேபிள் ஒட்டுவதாக இங்கிருக்கும் பாஜகவினர் தொடர்ச்சியாக கூறிவருகின்றனர். ஆனால் அதில் உண்மையல்ல” எனக்கூறி, அதை ஆதாரங்களுடன் பட்டியலிட்டார்.

மெட்ரோ பேஸ் 1 , பேஸ் 2 திட்டம்

“ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மயிலாப்பூரில் பேசுகையில், மெட்ரோ பேஸ் 1 , பேஸ் 2 எல்லாவற்றையும் தாங்கள்தான் செயல்படுத்துவதாக சொன்னார். 50% ஒன்றிய அரசின் பங்களிப்பு, 50% மாநில அரசின் பங்களிப்பு மற்ற மாநிலங்களில். ஆனால், தமிழ்நாட்டில் சென்னையில் நடக்கும் இரண்டாம் கட்ட மெட்ரோ பணிகளில் ஒரு ரூபாய் கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை. ஒன்றிய அரசின் அதிகாரப்பூர்வ செய்தி வெளியீட்டிலேயே இது மாநில அரசின் திட்டமாகத்தான் செயல்படுத்தப்படுகிறது என்றுதான் சொல்லப்படுகிறது.

17/08/2021ல் ஒன்றிய அரசின் திட்ட முதலீட்டு வாரியம் மெட்ரோ திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆனால் இப்போதுவரை அதற்கான நிதி கொடுக்கவில்லை. இதனால் தமிழ்நாடு அரசுக்கு இந்த நிதியாண்டில் 9 ஆயிரம் கோடியும், அடுத்த நிதியாண்டில் 12 ஆயிரம் கோடியும் கூடுதலாக செலவாகப்போகிறது. ஆனால் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் மயிலாப்பூரில் நாங்கள்தான் திட்டத்தை செயல்படுத்துகிறோம் என நிர்மலா சீதாராமன் சொல்லிவிட்டு போகிறார்.

திமுக செய்தித் தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி
திமுக செய்தித் தொடர்பாளர் சூர்யா கிருஷ்ணமூர்த்தி

மெட்ரோ ரயில்களில் கூட்டம் அதிகமாகிவிட்டது, நான்கு பெட்டிகள் உள்ள ரயில்களை 6 பெட்டிகளாக மாற்ற வேண்டும், அதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி தமிழ்நாட்டிற்கு கடன் கொடுக்க தயாராக இருக்கிறார்கள். அந்தக் கடன் வாங்குவதற்கான ஒப்புதலை, அதாவது கோப்புகளை ஆசிய வளர்ச்சி வங்கிக்கு பரிந்துரை செய்ய வேண்டும். நீங்கள் கடன்கொடுக்கலாம் என்ற பரிந்துரை.

இன்னும் சுருக்கமாக சொல்லவேண்டும் என்றால் கோப்புகளை அவர்களுக்கு மாற்றுவது (file forwarding). நவம்பர் மாதம் தமிழ்நாடு அரசு ஒன்றிய நிதியமைச்சகத்திற்கு திட்டக்கருத்துவை அனுப்பிவிட்டது. நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. இதுவரைக்கும் ஆசிய வளர்ச்சி வங்கியிடம் கடன்வாங்குவதற்கான ஒப்புதலைக் கூட கொடுக்காமல் ஒன்றிய அரசு நிறுத்திவைத்துள்ளது.

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்
“லஞ்ச லாவண்யம் தலைவிரித்தாடுகிறது”-ஜெயலலிதா ஆட்சி குறித்து பிரதமர் மோடி அன்றும் இன்றும் பேசியதென்ன?!

கலைஞர் வீடு வழங்கும் திட்டம்

அடுத்தது, பட்ஜெட்டில் அறிவித்திருக்கக்கூடிய கலைஞர் வீடு வழங்கும் திட்டத்தினை, பிரதம மந்திரி ஆவாஸ்யோஜனா எனும் திட்டத்தில் இருந்துதான் செயல்படுத்தப்போகிறார்கள் என்று இங்கிருக்கும் பாஜகவினர் கூறிவருகின்றனர்.

அடிப்படையில், வீடு இல்லாத ஏழைகளுக்கு, குடிசையில் வாழக்கூடிய ஏழைகளுக்கு கான்க்ரீட் வீடு கொடுக்க வேண்டும் என்ற சிந்தனை தமிழ்நாட்டில் இருந்துதான் உதித்தது.

தமிழ்நாட்டில் கலைஞர் கருணாநிதி 1970 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் குடிசை மாற்று வாரியம் எனும் வாரியத்தை அமைக்கிறார். அதனுடைய பணி குடிசையில் இருக்கும் மக்களுக்கு கான்க்ரீட் வீடுகளை கட்டிக்கொடுக்க வேண்டும் என்பது. 1970களிலேயே தமிழ்நாடு அதை செயல்படுத்த ஆரம்பித்துவிட்டது. அதன்பின் சமத்துவபுரம், பசுமைவீடுகள், கலைஞர் வீடு வழங்கும் திட்டம் எனும் பெயரிலேயே பல திட்டங்கள் வைத்திருந்தோம். இப்படி ஏகப்பட்ட வீடு வழங்கும் திட்டங்கள் நம்மிடையே இருந்தது.

கலைஞர் வீடு வழங்கும் திட்டம்
கலைஞர் வீடு வழங்கும் திட்டம்

அதேபோல் ஒன்றிய அரசிடமும் நிறைய வீடு வழங்கும் திட்டங்கள் இருந்தன. ஆதி திராவிடர்களுக்கு தனிவீடு வழங்கும் திட்டம், பிரதமர்கள் நேரு, இந்திராகாந்தி பெயர்களில் வீடு வழங்கும் திட்டங்கள் இருந்தது. இது எல்லாவற்றையும் ஒழித்துகட்டிவிட்டு பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா எனும் திட்டத்தை கொண்டு வருகிறார்கள்.

இந்த பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா எனும் திட்டம் வருவதற்கு முன்பே தமிழ்நாட்டில் குடிசை மாற்றுவாரியம் கட்டி, அதன்மூலம் குடிசை மக்களுக்கு வழங்கும் வீடுகளில் ஒரு ரூபாய் கூட மக்களிடம் இருந்து பணம் பெறப்படாது என்ற நிலையை உருவாக்கிவிட்டோம். மொத்தமாக தமிழக அரசின் செலவில் நடந்தது. இந்த ஆவாஸ் யோஜனா வந்த பின் ஒன்றிய அரசின் பங்களிப்பு, மாநில அரசின் பங்களிப்பு, மக்களது பங்களிப்பு அவசியம் என ஆவாஸ் யோஜனா சொல்லுகிறது.

உதாரணமாக நகர்ப்புறத்தைப் பொறுத்தவரை, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வியம் மேம்பாட்டு வாரியத்தில் வீடு கட்டவேண்டும் என்றால், 1.5 லட்சம் ரூபாய் ஒன்றிய அரசின் பங்குத்தொகை. 7 லட்ச ரூபாய் மாநில அரசின் பங்குத்தொகை, வீடு கட்டி முடியும் வரை எவ்வளவு செலவாகிறதோ அதை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். மீதமுள்ள தொகைக்கும் மாநில அரசு சிறப்புநிதி கொடுக்கிறது. திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றால் ஒன்றிய அரசின் பங்களிப்பு நகர்ப்புறங்களில் 1.5 லட்சம் ரூபாய்தான். மாநில அரசின் பங்களிப்பு 7 முதல் 10 லட்சம் ரூபாய் வரை இருக்கிறது. கிராமப்புறங்களில் PMAY norms படி 1.2 லட்சம் ரூபாய் தான் கொடுக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு கூடுதலாக 1.2 லட்சம் ரூபாய் கொடுக்கிறது. இந்த 2.4 லட்ச ரூபாயில் 72 ஆயிரம் மட்டும்தான் ஒன்றிய அரசின் பங்குத்தொகை. பாக்கி இருக்கும் 1 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் மாநில அரசின் பங்குத்தொகை.

ஆனால் அவர்கள் வைத்திருக்கும் பெயர்மட்டும், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா. அப்போது ஸ்டிக்கர் ஒட்டுவது யாரென்ற கேள்வி இயல்பாக எழுகிறது.

மினி க்ளினிக்கள்

அடுத்தது, மாநிலங்களில் இருக்கும் சிறுசிறு மினி க்ளினிக்கள் கட்ட ஒன்றிய அரசு நகர்ப்புற நல்வாழ்வு இயக்கம் மூலமாக நிதி கொடுக்கிறது. அந்த நிதி எல்லாம் ஒருமுறை கொடுக்கக்கூடிய நிதி. 5லட்சம் ரூபாய் கொடுத்தார்கள் என்றால் அது கட்டடம் கட்டுவதற்கான நிதி. ஆனால் அந்த கட்டடத்தை பராமரிப்பது, அதில் மருத்துவர்கள், செவிலியர்களை பணியமர்த்துவது, மருந்துகளை ஏற்பாடு செய்து கொடுப்பது என தினசரி பணிகளுக்கான செலவுகள் அனைத்தும் மாநில அரசுடையது. ஆனால் அத்திட்டத்திற்கு இந்தி பெயரை வைக்க வேண்டும். இந்திப்பெயரை வைக்கவில்லை என்றால் நிதி கொடுக்க மாட்டோம் என மிரட்டுவதை வழக்கமாக ஒன்றிய அரசு வைத்துள்ளது.

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்
🔴 LIVE | தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை | அமைச்சர் தங்கம்தென்னரசு உரை - விரிவான முழு தொகுப்பு!

ஜல்ஜீவன் திட்டம்

அடுத்தபடியாக ஜல்ஜீவன் திட்டம். வீடுகளுக்கு குழாய் மூலமாக குடிநீர் வழங்கும் திட்டம். ஜல்ஜீவன் திட்டத்தை பொறுத்தவரை அதற்கும் தமிழ்நாடுதான் முன்னோடி.

சுத்தமான குடிநீரை மக்களுக்கு கொண்டு சென்று கொடுக்க வேண்டும் என்பதற்காக, 1970 ஆம் ஆண்டு தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்தை கலைஞர் கருணாநிதி உருவாக்குகிறார். அதன்மூலம் ஏகப்பட்ட கிராமங்களுக்கு குடிநீரை கொண்டு போர் சேர்த்தாயிற்று.

கிராமங்களுக்கு தண்ணீரை கொண்டு போய் சேர்த்தபோது சில சவால்கள் இருந்தன. உதாரணமாக ராமநாதபுரம் என்பது வறண்ட பகுதி. அங்கு நீர் இருக்காது, அங்கு சுத்தமான குடிநீரைக் கொண்டு போய் கொடுக்க முடியாது. அதேபோல் வேதாரண்யம் என்பது கடல்பகுதி.

அங்கு சுத்தமான குடிநீரை கொடுக்க முடியாது. இதற்கெல்லாம் கூட்டுக்குடிநீர் திட்டம் என்றும் ஒன்றை செயல்படுத்தினார்கள். ராமநாதபுரம் கூட்டுக்குடிநீர் திட்டம் என்று, திருச்சியில் தண்ணீரை எடுத்து ராமநாதபுரத்திற்கு தண்ணீர் கொடுத்தோம். அதேபோல் வேதாரண்யம் கூட்டுக்குடிநீர் திட்டம் என்பது, கும்பகோணம் அருகில் தண்ணீர் எடுத்து வேதாரண்யத்தில் தண்ணீர் கொடுத்தோம். ஒக்கேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம், வேலூர் கூட்டுக் குடிநீர் திட்டம், வீராணம் திட்டம், புதிய வீராணம் திட்டம் இப்படி ஏகப்பட்ட திட்டங்களை தமிழக அரசு ஏற்கனவே நடத்தி முடித்துவிட்டது. இப்போது இவர்கள் வந்த பின் வீடுகளுக்கு குழாய் மூலம் தண்ணீர் கொடுக்கப்போகிறோம் என சொல்கிறார்கள். கிராமம் வரை தண்ணீர் கொண்டு போய் சேர்த்தாயிற்று. வீடுகளுக்கும் தண்ணீர் கொண்டு செல்லும் பணிகள் நடந்துகொண்டிருந்தது. இன்னும் சொல்லப்போனால், இதுகூட தேசிய குழாய்பதிப்பு குடிநீர் வழங்கும் திட்டம் என ஏற்கனவே பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் இருந்த திட்டத்தை பெயர் மாற்றித்தான் ஜல்ஜீவன் திட்டம் என கொண்டுவந்தார்கள்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

அந்த திட்டத்திலும் முழுமையாக ஒன்றிய அரசின் நிதி கிடையாது. 50% அவர்கள், 50% மாநில அரசு கொடுக்க வேண்டும்.

இந்த திட்டமும் ஒன்றிய அரசின் திட்டம் கிடையாது. மாநில அரசு ஏற்கனவே செய்து கொண்டிருந்ததை இவர்கள் அபகரித்த திட்டம்.

கைவினைஞர்கள் மேம்பாட்டுத் திட்டம்

கைவினை பொருட்கள்
கைவினை பொருட்கள்

அடுத்தது, தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள கைவினைஞர்கள் மேம்பாட்டுத்திட்டத்தை விஸ்வகர்மா திட்டத்தோடு பாஜகவினர் தொடர்புபடுத்துகிறார்கள். விஸ்வகர்மா திட்டத்திற்கும், கைவினைஞர்கள் மேம்பாட்டு திட்டத்திற்கும் அதிகமான வித்தியாசம் உள்ளது. விஸ்வகர்மா திட்டத்தில் 18 வயது நிரம்பி இருந்தாலே கடன் கொடுக்கப்படும். ஆனால், கைவினைஞர்கள் மேம்பாட்டுத்திட்டத்தில் குறைந்தது வயது 35 இருக்க வேண்டும்.

விஸ்வகர்மா திட்டத்தில் குடும்பத்தொழிலைத்தான் பார்க்க வேண்டும். மறைமுகமாக அது குலத்தொழிலை பார்க்க வேண்டும் என சொல்கிறது. ஆனால் இங்கிருக்கும் கைவினைஞர்கள் மேம்பாட்டுத்திட்டத்தில் அப்படி எவ்விதமான கட்டாயமும் இல்லை.

நீங்கள் பார்க்கக்கூடிய தொழில் கைவினைத் தொழிலாக இருந்தால், அது உங்கள் தாத்தா, அப்பா பார்த்திருக்க வேண்டிய அவசியம் இல்லாமல், உங்களுக்கு அத்தொழிலில் திறன் இருந்தால் நீங்கள் அத்தொழிலை பார்க்கலாம். விஸ்வகர்மா திட்டத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர், விண்ணப்பதாரர் அந்த குடும்பத்தொழிலைத்தான் பார்க்கிறார் என்ற சான்றிதழைக் கொடுக்க வேண்டும். தமிழக அரசு அறிமுகப்படுத்தும் திட்டத்தில் அம்மாதிரியான எந்த வரையறையும் கிடையாது. ஆக இந்த இரு திட்டங்களும் அடிப்படையில் வேறு வேறான திட்டங்கள்.

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்
கலைஞர் நினைவிடத்தில் ‘கலைஞர் உலகம்’ என தனி அரங்கம்... சிறப்பம்சங்கள் என்னென்ன?

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்

கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தை ஸ்மார்ட் சிட்டியின் நகல் என சொல்கிறார்கள். அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் எனும் பெயரில் கிராமங்களை மேம்படுத்தும் திட்டம், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் எல்லாம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்கள்.

ஸ்மார்ட் சிட்டியைப் பொருத்தவரை 11 நகரங்கள்தான் தமிழ்நாட்டிற்கு உள்ளது. அது ஏற்கனவே 2015 ஆம் ஆண்டிலேயே ஒப்புதல் அளித்துவிட்டார்கள், அந்த 11 நகரங்களை மேம்படுத்திவிட்டால் என்றால் அந்த திட்டம் முடிவடைந்தது. அதற்கு மேல் கூடுதல் நகரங்களை தமிழகத்திற்கு கொடுக்கவில்லை. அந்த நிதியில் கூட ஒன்றிய அரசின் முழுமையான நிதி கிடையாது. 50% அவர்கள், 50% மாநில அரசு தான். ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம் என்பது தமிழ்நாடு முழுவதும் 121 நகராட்சிகளிலும் 528 பேரூராட்சிகளிலும் செயல்பாட்டில் உள்ளது. இது ஸ்மார்ட் சிட்டியுடன் முற்றிலும் வேறான ஒரு திட்டம்.

பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்
மதுரை | கீழக்கரையில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை திறந்துவைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இன்னுயிர் காப்போம் திட்டம்

இன்னுயிர் காப்போம் திட்டம்
இன்னுயிர் காப்போம் திட்டம்

கடைசியாக, தமிழ்நாடு அரசின் இன்னுயிர் காப்போம் எனும் திட்டத்தை ஒன்றிய அரசின் திட்டம் என நேரிடையாக அண்ணாமலையே குற்றம் சாட்டுகிறார். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இரு அம்சங்கள் உள்ளன. ஒரு விபத்து நடந்ததென்றால் அவரை மருத்துவமனையில் சேர்த்ததில் இருந்து முதல் 48 மணி நேரத்திற்கான சிகிச்சையின் செலவை அரசே ஏற்கும். அடுத்தது விபத்தில் சிக்கியவரை மருத்துவமனையில் சேர்த்தவருக்கு அரசு 5000 ரூபாய் கொடுக்கும். மத்திய அரசும் இதேபோல் ஒரு திட்டத்தை செயல்படுத்துகிறார்கள். அது மருத்துவமனையில் அனுமதித்தவருக்கு ரூ.5000 கொடுப்பது மட்டும்தான்.

மற்றபடி பாதிக்கப்பட்டவருக்கான முதல் 48 மணிநேரத்திற்கான செலவை ஒன்றிய அரசு ஏற்கும் திட்டம் என்று ஒன்று இல்லை. இதை நான் சொல்லவில்லை. 05/04/2023 அன்று நாடாளுமன்றத்தில் நிதின் கட்கரி, அது பரிசீலனையில் உள்ளது என்றுதான் சொன்னார். 15/01/2024 இந்திய நிறுவனங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில், ஒன்றிய அரசின் சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் செயலாளர் அனுராக் ஜெயின், 48 மணி நேரத்திற்கான மருத்துவ செலவினை அரசே ஏற்கக்கூடிய திட்டம் என்பது நடைமுறையில் இல்லை, அது பரிசீலனையில் உள்ளது. விரைவில் நாங்கள் செயல்படுத்தப்போகிறோம் என்றுதான் சொன்னார்கள். ஆனால் தமிழ்நாடு அரசு ஏற்கனவே 2 ஆண்டுகளாக இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி முடித்துவிட்டது. அதனுடைய விளைவுகளை தமிழக அரசு வெற்றிகரமாகவே காட்டியுள்ளது.

ஆக ஒன்றிய அரசின் பங்களிப்புத் திட்டங்கள் எல்லாமே ஏற்கனவே தமிழகத்தில் இருந்த திட்டங்கள்தான். அவர்கள் சிந்தித்து உருவாக்கிய திட்டங்கள் அல்ல” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com