சென்னையில் உள்ள நிஸ்ஸான் ஆலையில் டாட்சன் கார் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளது. இதனால் ஏராளமான வேலைவாய்ப்புகள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஜப்பானை சேர்ந்த நிஸ்ஸான் நிறுவனம் சென்னை அருகே ஒரகடத்தில் டாட்சன் ரக கார்களை தயாரித்து வந்தது. இந்நிலையில் சந்தை சூழ்நிலையை அனுசரித்து டாட்சன் வகை கார்கள் உற்பத்தியை நிறுத்தப்போவதாக நிஸ்ஸான் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட டாட்சன் கார்கள் மட்டும் தொடர்ந்து விற்பனை செய்யப்படும் என்றும் அந்நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. தங்கள் கார்களுக்கான விற்பனைக்கு பிந்தைய சேவையும் உதிரி பாக விற்பனையும் தொடரும் என்றும் நிஸ்ஸான் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. எனினும் நிஸ்ஸானின் மற்றொரு ரக காரான மேக்னைட்டின் உற்பத்தி மட்டும் நடைபெறும் எனத் தெரிகிறது. டாட்சன் கார் உற்பத்தி நிறுத்தப்படுவதால் ஏராளமானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே ஃபோர்டு நிறுவனமும் தனது சென்னை ஆலையை மூடப்போவதாக அறிவித்திருந்தது. எனினும் இந்த ஆலையை மின்சார வாகன உற்பத்தி ஆலையாக மாற்றுவது குறித்து ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு பேசி வருகிறது. தற்போது நிஸ்ஸானும் மூடப்படுவதால் அங்குள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த வேண்டிய சூழல் அரசுக்கு ஏற்பட்டுள்ளது
இதையும் படிக்க: தமிழகத்தில் வேலைவாய்ப்பு எத்தனை சதவிதம் அதிகரிப்பு? ஆய்வில் வெளியான தகவல்