இடைத்தேர்தல் முடிந்தவுடன் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை எனில், இந்த மாதம் 25 ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம், நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது என்பன உள்ளிட்ட 4 அம்சக் கோரிக்கைகளை அரசு மருத்துவர் வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் 27 ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் 6 வாரங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமென அரசு உறுதியளித்தது.
இந்த அவகாசம் செவ்வாயன்று நிறைவடைந்தது. இதையடுத்து, நேற்று அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் அவசர செயற்குழு கூட்டத்துக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், அவர்கள் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.