இன்று அதிகாலை (2.30 மணியளவில்) அமைச்சர் செந்தில் பாலாஜி கைதான நிலையில், அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதையொட்டி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்த அவரை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
ஹெல்த் செக்-அப்பிற்காக அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு இசிஜி எடுக்கப்பட்டது. அதில் ரத்த அழுத்தத்தில் வேறுபாடு இருப்பதாகவும், அதனால் ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்ய மருத்துவர்கள் அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. அதன்பேரில் அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை காலை 10.30 மணியளவில் செய்யப்பட்டது. அதன் முடிவில் அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்தின் மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதைத்தொடர்ந்து, அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அமைச்சரின் உடல்நலன் குறித்து ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மின்சாரம், ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி (வயது 47) அவர்களுக்கு இருதய ரத்த நாள பரிசோதனை 14.06.2023 அன்று, காலை நாள் 10.40 மணியளவில் செய்யப்பட்டது.
அப்பரிசோதனையில் மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது. அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது” எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இன்றே அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடுகள் நடந்துவருகின்றன என்று கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆஞ்சியோகிராம் பரிசோதனை குறித்தும், ரத்தக் குழாய் அடைப்பு குறித்தும் இதயநோய் மருத்துவ நிபுணர் டாக்டர் விவேகன் புதிய தலைமுறையில் பகிர்ந்துகொண்ட தகவல்களை, கீழ்க்காணும் காணொளியில் அறியலாம்.