செய்தியாளர் - பால வெற்றிவேல்
பிரபல Youtuber இர்ஃபானும் அவர் மனைவியும் தற்போது குழந்தையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். இந்நிலையில் கருவிலுள்ள தங்கள் குழந்தை என்ன பாலினம் என்பதை வெளிநாட்டு மருத்துவமனை ஒன்றில் தெரிந்துக் கொண்டுள்ளனர் இத்தம்பதி. இதனை தங்களின் வலைதளப்பக்கத்தில் இர்ஃபான் சில தினங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார்.
இந்தியாவைப் பொருத்தவரையில் கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிந்துக்கொள்வது சட்டப்படி குற்றம். இந்நிலையில் தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை வலைதளப்பக்கத்தில் Youtuber இர்ஃபான் தெரிவித்திருந்ததால், தமிழ்நாடு மருத்துவதுறை அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளது. மேலும் ‘குழந்தையின் பாலினத்தை வெளிப்படுத்தியது ஏன்?’ என்ற கேள்வியையும் சுகாதாரத்துறை கேட்டுள்ளது.
இது குறித்து, சமூக சமத்துவத்திற்கான மருத்துவச் சங்கத்தின் செயலாளரும் மகப்பேறு மருத்துவருமான சாந்தி அவர்களிடம் பேசினோம். அவர் நம்மிடையே பேசுகையில்,
“பாலினத்தை வெளிப்படுத்துவது இந்தியாவில் மட்டுமே தடை செய்யப்பட்டுள்ளது. வேறு நாட்டில் பரிசோதனை செய்ததற்கு இங்கு சட்டப்படி தண்டனைகளை சந்திக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. இவ்விஷயத்தில் இர்ஃபான் இணையத்தில் அறிவித்துள்ளார். இதற்கெல்லாம் சட்டத்தில் பல ஓட்டைகள் உள்ளன. எனவே அவர் மீது 1994 கருக்கலைப்பு தடுப்புச் சட்டம் சட்டம் பாய்வதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு.
‘எனது வயிற்றில் இருக்கும் குழந்தை பெண் குழந்தை’ என்பதை ஒருவர் பெருமையாக கூறும் விஷயத்தை நாம் மதிக்க வேண்டும். இதுவரை இதுபோன்ற பிரச்னைகள் (இர்ஃபான் விவகாரம் போல) இங்கு வந்ததில்லை. பெங்களூரு போன்ற இடங்களில் மறைமுகமாக பாலினத்தை வெளிப்படுத்துதல் நடைபெற்றுள்ளது என்கிற தகவல் வெளிவருகிறது. இந்த வீடியோவை விளம்பரத்திற்காக மட்டுமா செய்தார் என்கிற விளக்கத்தை இர்ஃபான்தான் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கலாம். சட்டம் தனது கடமையை செய்யும். இதுபோன்ற பிரச்னைகள் இப்போதுதான் வெளி வருகிறது. பெண் குழந்தை பிறப்பதை ஊக்குவிக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்ய வேண்டும்.
பெண் குழந்தைகள் எண்ணிக்கை நாட்டில் குறைவாக உள்ளது; ஆண் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. எனவே பாலின சமநிலைக்காக 1994 ஆம் ஆண்டு இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது. இதன்படி இந்தியாவில் குழந்தையின் பாலினத்தை வெளியே தெரியப்படுத்துதல் மற்றும் பாலினத்தை முடிவு செய்தல் போன்றவை தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்டம் வந்து 30 வருடங்கள் ஆகின்றன. இந்த சட்டத்தினால் ஏற்பட்ட பலன் என்ன என்பது குறித்த ஆய்வு நம்மிடம் இல்லை. எதிர்பார்த்த அளவிற்கு பெண்களின் எண்ணிக்கை கடந்த 30 வருடங்களில் அதிகரிக்கவில்லை. குழந்தைகள் பிறந்தவுடன் ஆண் பெண் சமநிலை குறித்த பாலின ஆய்வு நடத்தப்படுகிறது. இந்த சட்டத்தில் நிறைய குறைகள் ஓட்டைகள் இருக்கின்றன. சட்டம் கொண்டுவரப்பட்ட நோக்கத்திற்கான பலன் நிறைவேற்றப்படவில்லை.
பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கு பாலினத்தை வெளிப்படுத்துவது மட்டும் போதுமானது என ஆட்சியாளர்கள் நம்பிக் கொள்கிறார்கள். பாலின சமத்துவத்தில் இந்தியாவின் தரம் தொடர்ந்து குறைந்து வருகிறது. ஒரு சிலரை தண்டிப்பது மட்டும் நோக்கத்தை நிறைவேற்றாது.
பொதுவாகவே குழந்தையை கருக்கலைப்பு செய்வதற்கு ஒரு குறிப்பிட்ட வாரங்கள் உள்ளன. இர்ஃபான் விகாரத்தை பொருத்தவரை ஆறு மாதத்தை கடந்து விட்டது, அவர் வெளியே அறிவித்துள்ளதும் வெளிநாட்டின் ஆய்வை வைத்து. பெண்ணை பெற்றால் சுமை கிடையாது என்கிற ஒரு எண்ணத்தை சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார்.