ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில், மருத்துவர் பாலாஜி ஆஜராகி விளக்கமளித்தார்.
திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி இடைத்தேர்தலின்போது தேர்தல் ஆவணத்தில் ஜெயலலிதாவின் கைரேகையை பெற்றது குறித்த விளக்கத்தை மருத்துவர் பாலாஜி, நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது, கைரேகை பெறும் போது ஜெயலலிதாவை சந்தித்ததாக கூறினார். எய்ம்ஸ் மருத்துவர்களும், லண்டன் மருத்துவரும்தான் சிகிச்சை அளித்ததாகவும், லண்டன் கொண்டுசெல்ல வேண்டுமென்ற அறிவுறுத்தலை ஜெயலலிதா ஏற்க மறுத்துவிட்டதாகவும் பாலாஜி தெரிவித்தார்.
சசிகலா மட்டுமே இறுதி வரை உடன் இருந்ததாக கூறிய அவர், அரசு தரப்பில் அமைக்கப்பட்ட 5 பேர் கொண்ட மருத்துவ குழுவில் தான் மட்டுமே ஜெயலலிதாவை பார்த்ததாக தெரிவித்தார். ஐதராபாத், பெங்களூரு போன்ற பகுதிகளில் இருந்தும் சில மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க வந்ததாகவும், மருத்துவர் பாலாஜி விசாரணை ஆணையத்தில் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மீண்டும் வரும் 27ஆம் தேதி ஆஜராக பாலாஜியிடம் அறிவுறுத்தப்பட்டது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக வரும் வாரங்களில் விசாரணைக்கு வர ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் மேலும் பலருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. முதல்வர் அலுவலக தனிப்பிரிவு செயலக அதிகாரியாக இருந்த ஷீலாபாலகிருஷ்ணன், தலைமைச் செயலராக இருந்த ராம்மோகன் ராவ், அப்போலோ குழுமத் தலைவர் பிரதாப் ரெட்டி ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதாக அண்ணன் மகன் தீபக்கை 14ம் தேதியும், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபாவை 13ம் தேதியும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவர் ஷங்கர் 12ம் தேதி விசாரணைக்கு வர வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.