சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் புதிதாக தொடங்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க வேண்டாம் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
மதுரைச் சேர்ந்த வாசுதேவா என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். அதில் “ புதிதாகக் கட்டப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளை பயன்பாட்டுக்கு கொண்டுவந்தால் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின்படி அரசு மாணவர்கள் 124 பேர் அதில் கல்வி கற்க முடியும் எனக் குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை அரசிடம் தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையைக் கேட்டது. அதற்கு தமிழக அரசு சார்பில் புதிதாக கட்டப்பட்ட கல்லூரிகளைத் தவிர்த்து மொத்தம் 26 அரசு மருத்துவக் கல்லூரிகளும், 11 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இருப்பதாகக் கூறியது. மேலும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளில் அடுத்த ஆண்டுதான் மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் எனவும் விளக்கம் அளித்தது.
இதனையடுத்து பேசிய நீதிபதிகள் “ போதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கும் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்க அனுமதி அளிக்க இயலாது ” எனக் கூறினர். மேலும் பொறியியல் கல்லூரிகளைப்போல மருத்துவக் கல்லூரிகளும் ஆகி விட கூடாது என்றும் கருத்து தெரிவித்தனர்.