தருமபுரி மாவட்டம், நத்தமேடு கிராமத்தில் வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்தவர் குடும்பத்தை சந்திக்கச் சென்ற திமுக எம்.பி செந்தில்குமாரை, உள்ளே விடாமல் பாமகவினர் தாக்க முயற்சி செய்தனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதியில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பிரச்சார பயணம் நடைபெற்று வருகிறது. இதில் தருமபுரி எம்.பி செந்தில்குமார் பிரசாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து கடத்தூரை அடுத்துள்ள நத்தமேடு கிராமத்தில், வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த, சுப்பிரமணி என்பவரது நினைவு தூணுக்கு மரியாதை செலுத்த முற்பட்டபோது, அங்கு கூடியிருந்த பாமக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செந்தில்குமாரை உள்ளே வரக்கூடாது என தகாத வார்த்தைகளால் திட்டினர். தொடர்ந்து அவரை தாக்கவும் முயற்சி செய்தனர். அப்பொழுது காவல் துறையினர் தடுத்து செந்தில்குமாரை பாதுகாப்பாக அழைத்து சென்று, அருகில் இருந்த அரசு சேவை மைய கட்டத்தில் அமர வைத்தனர். தொடர்ந்து சிறிது நேரம் சேவை மைய கட்டிடத்தில் அமர்ந்திருந்த செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், ’’வன்னியர் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த சுப்பிரமணி குடும்பத்தை சந்தித்து பேசி, அவர்களின் வறுமையை போக்குவதற்காக ஒரு லட்சம் நிதிஉதவி வழங்கி விட்டு, நினைவிடத்திற்கு மரியாதை செலுத்துவதற்காக வந்திருந்தேன். ஆனால் பாமகவினர் நினைவிடம் வன்னியர் சங்க இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது இங்கே வரக்கூடாது என தெரிவித்தனர். இதனால் அவரது குடும்பத்தினரை சந்திக்க நினைத்தேன். ஆனால் நேற்று இரவே சுப்பிரமணியன் மனைவியை இந்த இடத்தில் இருந்து கடத்தி சென்று உள்ளார்கள். ஆனால் அவருக்கு வழங்க வைத்திருக்கின்ற இந்த நிதி எங்களிடமே இருக்கும், அதை சுப்பிரமணியின் மனைவி எப்பொழுது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்’’ என்றார்.