கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் உள்ள மகாலிங்க சுவாமி ஆலயத்திற்கு இன்று காலை திடீரென வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரம்மஹத்தி தோஷ பரிகாரம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, "திமுகவின் 100 நாட்கள் ஆட்சி நன்றாகவும் நடுநிலையோடும் உள்ளது. இது தொடர வேண்டும்" என்றார். முன்னாள் அமைச்சர் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை குறித்து கேட்டதற்கு, தமிழகத்தில் ஆட்சிகள் மாறினாலும், காட்சிகள் மாறவில்லை என தெரிவித்தார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் குறித்த கேள்விக்கு, பொதுமக்களும் அர்ச்சகர்களும் இதனை ஏற்றுக் கொண்டால் நாங்களும் இதை ஏற்றுக் கொள்வோம் என்று பிரேமலதா தெரிவித்தார்.
மேலும், விஜயகாந்த் நலமுடன் உள்ளதாகவும், உள்ளாட்சித் தேர்தல் எந்த நேரத்தில் அறிவித்தாலும் அதனை தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் சந்திக்க தயாராக இருக்கவேண்டும் என்று விஜயகாந்த் தெரிவித்ததாக பிரேமலதா தெரிவித்தார்.