திமுக இளைஞரணியின் இரண்டாவது மாநாடு சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் இன்று நடைபெறுகிறது.
மாநாட்டு தீர்மானங்களின் சுருக்க வடிவத்தை திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வாசித்தார். அப்போது 13 ஆவது தீர்மானத்தை வாசித்த உதயநிதி, “நீட் நுழைவுத்தேர்வை ஒழிக்கும் வரை நமது போராட்டம் ஓயாது. அனிதா முதல் ஜெகதீசன் வரை தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக்கனவை சிதைத்து உயிர்களை பறிக்கும் நீட் தேர்வை விலக்க உண்ணாநிலை அறப்போராட்டத்தை முன்னெடுத்த இளைஞரணி, அதனை அடுத்து நீட் விலக்கு நமது இலக்கு எனும் நோக்கில் 85 லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்தை பெற்று மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றிக்காட்டியுள்ள நிலையில், நீட் தேர்வு ஒழிப்பில் இறுதி வெற்றியை முழுமையாக பெற்றே தீரும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது” என்றார்.
தொடர்ந்து தீர்மானம் 15 வாசித்த அமைச்சர் உதயநிதி, “மாநிலப்பட்டியலுக்கு கல்வி, மருத்துவத்தை மாற்ற வேண்டும். பள்ளிக்கல்வி முதல் உயர்க்கல்வி வரை அனைத்திலும் ஒன்றிய அரசின் ஆதிக்கம் நீடிப்பது என்பது அந்த மாநிலத்தின் மொழி, பண்பாடு, திறன் மேம்பாடு போன்றவற்றை சிதைக்கும் நோக்கத்தில் இருப்பதாலும், ஜனநாயக நெறிமுறைகளுக்கு நேர் எதிரானது என்பதாலும், பொதுப்பட்டியலில் உள்ள கல்வியையும் மருத்துவத்தையும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வேண்டுமென்பதை வலியுறுத்தி அதற்கான சட்ட வழிமுறைகளை இளைஞரணி முன்னெடுக்கும் என்று இந்த மாநாடு தீர்மானிக்கிறது” என்றார்.
பின் தீர்மானம் 17 ஐ வாசித்த உதயநிதி, “ஆளுநர் பதவியை நிரந்தரமாக அகற்றிட வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநில அரசுகளை நியமன பதவியான ஆளுநர் பதவியைக் கொண்டு செயல்படவிடாமல் தடுக்க முயற்சித்து, ஆளுநர்களை கொண்டு இணை அரசாங்கம் நடத்த திட்டமிடும் ஒன்றிய பாசிச பாஜக அரசின் ஜனநாயக விரோத போக்கினை கண்டிப்பதுடன் ஆளுநர் பதவி என்ற தொங்கு சதையை நிரந்தரமாக அகற்றுவதே ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான தீர்வு என இம்மாநாடு தீர்மானிக்கின்றது” என தெரிவித்துள்ளார்.