தமிழகத்தில் நிலையான ஆட்சியை ஒரே இரவில் காபந்து சர்க்காராக மாற்றியவர் சசிகலா என்று திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது:
கடந்த சில தினங்களாக அதிமுக அரசியலில் தோன்றிய புதுமுக “பொதுச் செயலாளர்” சசிகலா நடத்தும் அரசியல் கேலிக்கூத்துகள் தமிழகத்தின் பெருமையையும், தமிழக மக்களின் புகழையும் அகில இந்திய அளவில்- ஏன் உலக அளவில் கெடுக்கும் விதத்தில் அமைந்திருப்பது வேதனைக்குரியது.
“எனக்கு அரசியல் ஆசையே இல்லை” என்று கூறி, ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் மீண்டும் அடைக்கலம் தேடியவர் பிறகு திடீரென்று அக்கட்சியின் பொதுச் செயலாளரானார். அது அவர்கள் உட்கட்சி பிரச்சினை என்று கருதினோம். ஆனால் இன்றைக்கு மாநில நலனுக்கு விரோதமாக, மாநிலத்தில் இருக்கும் நிலையான ஆட்சியை சீர்குலைக்கும் விதத்தில் ஒரு சுயநல திருவிளையாடலை நடத்தியிருக்கிறார் சசிகலா என்பதைக் காணும் போது “எல்லாம் பதவி படுத்தும் பாடு” என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.
முதலமைச்சராக வேண்டும் என்று சசிகலா துடிப்பதை அதிமுக தொண்டர்கள் மட்டுமல்ல- தமிழக மக்கள் அனைவருமே ஏற்றுக் கொள்ளவில்லை. “விரும்பத் தகாத ஒரு சூழல் தங்கள் வீடு தேடி வருகிறதே. இதற்காகவா வாக்களித்தோம்” என்று தமிழக மக்கள் கொதிநிலை அடைந்திருக்கிறார்கள். நிலையான ஆட்சியை ஓரே இரவில் “காபந்து சர்க்காராக” மாற்றியிருக்கின்ற சசிகலா முதலமைச்சராவதற்காக மக்கள் நிச்சயமாக வாக்களிக்கவில்லை. ஏன் அதிமுக தொண்டர்களே கூட அதற்காக வாக்களிக்கவில்லை. சசிகலாவுக்காக அவர்கள் யாரும் பிரச்சாரம் செய்யவும் இல்லை. ஜெயலலிதாவின் மறைவைப் பயன்படுத்தி கொல்லைப்புறமாக இப்போது முதலமைச்சர் பதவியில் அமர நினைக்கும் சசிகலா, ஜெயலலிதாவை நம்பி வாக்களித்த மக்களுக்கு மன்னிக்கமுடியாத துரோகத்தை இழைத்திருக்கிறார். இவ்வாறு ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.