’என்னை அழைக்காமல் அரசு நிகழ்ச்சியா..?’ என வசைபாடிய திமுக ஒன்றிய செயலாளரால் செங்கல்பட்டு மாவட்ட மருத்துவ முகாமில் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் படாளம் அருகே உள்ள புக்கத்துறை பகுதியில் இயங்கிவரும் அரசினர் உயர்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவத்துறை சார்பாக, மறைந்த முதல்வர் கலைஞரின் ’வருமுன் காப்போம்’ மருத்துவ சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், திமுகவைச் சேர்ந்த செங்கல்பட்டு மாவட்ட குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், அதிமுகவைச் சேர்ந்த மதுராந்தகம் ஒன்றிய குழுத் தலைவர் கீதா கார்த்திகேயன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் முருகவேல் மற்றும் அதிமுகவின் ஒன்றிய செயலாளர் அப்பாத்துரை, அதேபோல அரசு சார்பில் மருத்துவ அலுவலர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பொது சுகாதார முகாமில் காய்ச்சல், பொது மருத்துவம், தோல் நோய் உள்ளிட்ட அடிப்படை மருத்துவத்திற்காக ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. நிறைய அரசு மருத்துவர்கள் பொதுமக்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக வந்திருந்தனர். இதற்கு முன்னதாக, துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில், திமுகவைச் சேர்ந்த மாவட்டக்குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ் பேச துவங்கியபோது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மதுராந்தக வடக்கு ஒன்றிய சத்திய சாய் அங்கு வந்தார்.
எதிர்பாராத விதமாக சத்திய சாய் மாவட்ட குழு தலைவர் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென்று மேலே இருந்து இறங்குமாறு கூச்சலிட்டார். திராவிட முன்னேற்ற கழக ஒன்றிய செயலாளரின் இந்த செயலால் அதிர்ந்த மாவட்ட குழுத் தலைவர் உடனடியாக தனது பேச்சை நிறுத்தினார். ஒன்றிய செயலாளர் எதிர்ப்பின் காரணமாக மாவட்ட குழுத் தலைவர் உடனடியாக அங்கிருந்து காரில் ஏறி புறப்பட்டுச் சென்றுவிட்டார்.
திமுகவின் ஒன்றிய செயலாளர் சத்திய சாய் அங்கிருந்த மருத்துவ மற்றும் வட்டார அலுவலர்களிடம், ஆளுங்கட்சியை கூப்பிடாமல் ஏன் அரசு நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள் என்று தகாத வார்த்தைகளால் அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது. மக்கள் பிரதிநிதியாக இல்லாத ஒருவரை அழைக்கவேண்டிய கட்டாயம் இல்லை என எடுத்துக்கூறியும் தொடர்ந்து அவர் அதிகாரிகளை ஒருமையில் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.