சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாக குடியரசுத் தலைவரிடம் முறையிட உள்ளதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சட்டப்பேரவை நிகழ்வுகள் தொடர்பாக ஆளுநரிடம் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளதாகத் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக குடியரசுத்தலைவரை சந்தித்து முறையிட இருப்பதாகவும், அதற்காக நேரம் கேட்கப்பட்டுள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். நம்பிக்கை வாக்கெடுப்புக்காகக் கூட்டப்பட்ட சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டத்தில் அமளியில் ஈடுபட்டதாகக் கூறி எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள், அவை காவலர்களால் குண்டுக்கட்டாகத் தூக்கி வெளியேற்றினர். இந்த சம்பவத்தின்போது திமுக உறுப்பினர்கள் தாக்கப்பட்டதாக கிழிந்த சட்டையுடன் ஆளுநரிடம் ஸ்டாலின் நேற்று புகார் அளித்திருந்தார். அதேபோல, எதிர்கட்சிகள் இல்லாமல் பேரவையில் நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி திமுக எம்பிக்கள், ஆளுநர் வித்யாசாகர் ராவை நேரில் சந்தித்து இன்று மனு அளித்திருந்தனர். பேரவை நிகழ்வுகளை கண்டித்து திமுக சார்பில் மாவட்ட தலைநகரங்களில் வரும் 22ல் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.