அனுமதியின்றி பேனர் வைக்க மாட்டோம் என திமுக தரப்பில் உயர்நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக பேனர்கள் வைக்கப்படுவது தொடர்பாக சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் வைத்திருந்த விதி மீறல் பேனர் விழுந்து சுபஸ்ரீ மரணம் தொடர்பாக நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, பேனர் வைக்க மாட்டோம் என அனைத்து கட்சியினரும் அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதைக்கேட்ட நீதிபதிகள், அனைத்து கட்சியினரும் விரும்பும் பட்சத்தில், அது தொடர்பான அறிவிப்புகளை நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யலாம் என அறிவுறுத்தியது. இந்நிலையில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.
அதில், விதிகளை மீறி பேனர்கள் வைக்க வேண்டாம் என கடந்த 2017ஆம் ஆண்டு கட்சியின் உறுப்பினர்களுக்கு திமுக அறிவிப்பு வெளியிட்டதாகவும், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவின் போது பேனர் விழுந்ததில் கோவை ரகு மரணம் அடைந்த போதும் சட்ட விரோத பேனர்களை தடுக்க வேண்டும் என திமுக வழக்குப் போட்டிருந்ததாகவும் அக்கட்சியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், சட்ட விரோத பேனர்கள் தொடர்பாக நீதிமன்றம் பிறப்பிக்கும் அனைத்து உத்தரவுகளையும் முறையாக பின்பற்றுவோம் என தெரிவித்த திமுக, நீதிபதிகள் சத்யநாராயணன், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில், பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்ததாக தெரிவித்தது.