தொடங்கியது திமுக-வின் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரிய உண்ணாவிரத போராட்டம்!

மதுரையை தவிர்த்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுகவினர் இன்று உண்ணாவிரதம் இருக்கின்றனர்
நீட் தேர்வுக்கு எதிரான திமுக உண்ணாவிரதம்
நீட் தேர்வுக்கு எதிரான திமுக உண்ணாவிரதம்புதிய தலைமுறை
Published on

நீட் தேர்வு ரத்திற்கு எதிராக செயல்படும் மத்திய அரசு மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுகவின் பல்வேறு அணிகள் சார்பில் அறிவிக்கப்பட்ட உண்ணாவிரதம், தொடங்கியுள்ளது. மதுரையை தவிர்த்து தமிழகம் முழுவதும் நீட் தேர்வுக்கு எதிராக திமுகவினர் இன்று உண்ணாவிரதம் இருக்க உள்ளனர்.

இதில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெறும் ஆர்ப்பாட்டத்தை திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தொடங்கி வைத்துள்ளார். சென்னையில் நடைபெறும் உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட செயலாளர்கள் தலைமையில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

அதிமுகவின் மாநாட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மதுரையை தவிர பிற மாவட்ட தலைமை நகரங்களில் உண்ணாவிரதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த உண்ணாவிரதம் தொடர்பாக திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன், திமுக மருத்துவ அணி செயலாளர் எழிலன் நாகநாதன், கனிமொழி, திமுக மருத்துவ அணி தலைவர் கனிமொழி என்.வி.என்.சோமு, திமுக மாணவர் அணி தலைவர் ராஜிவ்காந்தி ஆகியோர் கூட்டாக வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில்,

“தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவராகும் கனவைச் சிதைத்து - அவர்களின் உயிரைப் பறிக்கின்ற உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உருவெடுத்திருக்கிறது. மாணவர்களை மட்டுமன்றி, பெற்றோரையும் மரணக்குழியில் தள்ளும் நீட் தேர்வை ரத்து செய்யாத ஒன்றிய அரசையும், பொறுப்பற்ற ஆளுநரையும் கண்டித்து, கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, தி.மு.க இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி சார்பில், தமிழ்நாடு முழுவதும், வரும் ஆகஸ்ட் 20 அன்று அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத அறப்போரை நடத்தவுள்ளோம்.

BAN NEET MK Stalin
BAN NEET MK Stalin

அரியலூர் அனிதாவில் ஆரம்பித்த நீட் மரணம், குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை திரு.செல்வசேகர் வரை தொடர்கிறது. செல்வசேகர் அவர்களின் திருவுடலுக்கு மரியாதை செய்யச் சென்றபோது, யாரை தேற்றுவது – யாருக்கு ஆறுதல் சொல்வதென்று கேட்கும் அளவுக்கு அங்கு எல்லோரும் சோகத்தில் உறைந்திருந்தார்கள். நமக்கே அங்கு ஆறுதல் தேவை என்ற நிலைதான் இருந்தது.

ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் எண்ணத்தின் வெளிப்பாடாக நீட் தேர்வுக்கு விலக்கு பெறும் முயற்சிகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது. ஆனால், அந்த நடவடிக்கைகளுக்கு எல்லாம் ஆளுநர் ரவி முட்டுக்கட்டை போட்டு வருகிறார்.

நீட் தேர்வுக்கு எதிரான திமுக உண்ணாவிரதம்
“நீட் விலக்கு மசோதாவிற்கு கையெழுத்திட மாட்டேன்” - ஆளுநர் ஆர்.என்.ரவி திட்டவட்டம்

நம் மாணவச்செல்வங்களின் மரணம், ஆளுநரையோ, அவரை இங்கு அனுப்பியுள்ள ஆரிய மாடல் ஆட்களையோ துளியும் பாதிக்கவில்லை. “நீட் மசோதாவில் கையெழுத்துப் போட மாட்டேன்” என்று கூறிய ஆளுநரிடம், சேலத்தைச் சேர்ந்த திரு.அம்மாசியப்பன் ராமசாமி நேருக்கு நேர் கேள்வி எழுப்பியபோது, அதற்குப் பதில் அளிக்க முடியாத ஆளுநர் அவரிடம் இருந்த மைக்கை பிடுங்கி உட்காரச் சொல்கிறார். இத்தனைக்கும் ஆளுநரிடம் கேள்வி எழுப்பிய திரு.அம்மாசியப்பன் ராமசாமி அவர்களின் மகள் நீட் தேர்வில் வெற்றிப் பெற்றுள்ளார். நீட் தேர்வில் வெற்றிபெற்றவர்கள், பயிற்சி மையம் சென்று லட்சங்கள் செலவு செய்து தேர்வில் வென்றவர்கள்கூட நீட்டை எதிர்க்கிறார்கள்.

நீட் தேர்வுக்கு எதிரான திமுக உண்ணாவிரதம்
ஆளுநரிடம் நீட் தொடர்பாக கேள்வி எழுப்பிய மத்திய அரசு ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் பாஜக!

நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிந்துரைக்கு அனுப்பி வைத்த பிறகு, ஆளுநர் எப்படி அதில் கையெழுத்திட முடியும்? கலைஞர் ஆட்சியின் போது, அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது வராத நீட், எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியின் போது தமிழ்நாட்டுக்குள் வந்தது. நீட் விலக்கிற்காக 2017-ஆம் ஆண்டு அ.தி.மு.க. அரசு நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாவை, குடியரசுத்தலைவர் நிராகரித்ததை, 21 மாதங்கள் வரை, தமிழ்நாடு சட்டப்பேரவைக்குத் தெரிவிக்காமல் அ.தி.மு.க. அடிமைகள் மறைத்தனர். ஒன்றிய உள்துறை அமைச்சகம், சென்னை உயர்நீதிமன்றத்தில் கூறியபோதுதான், அது தமிழ்நாட்டுக்கே தெரியவந்தது. இப்படிப்பட்ட துரோக வரலாற்றைக் கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கோ, பிற அதிமுகவினருக்கோ நம்மை விமர்சிக்க எந்த அருகதையும் இல்லை.

தமிழ்நாடு அரசு எத்தனை முறை கோரிக்கை வைத்தாலும் ஒன்றிய பா.ஜ.க. அரசு அதனைப் பொருட்படுத்துவதே கிடையாது. இந்த நேரத்தில் மாணவச்செல்வங்களுக்கு நாங்கள் சொல்வதெல்லாம் ஒன்றே ஒன்று தான், நீட் தேர்வு என்பது நிரந்தரம் கிடையாது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிச்சயம் நீட் தேர்வை ஒழிப்பார்கள். அதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை.

எனவே, மாணவச்செல்வங்கள் தன்னம்பிக்கையுடனும்- மன உறுதியுடனும் பொறுமை காத்திருக்க வேண்டுகிறோம். எத்தனை மரணங்கள் நிகழ்ந்தாலும், நீட் தேர்வு நடக்கும் என்ற எதேச்சதிகாரப் போக்கில் உள்ள ஒன்றிய அரசையும் – இல்லாத அதிகாரம் இருப்பது போல் மாளிகையில் கொக்கரிக்கும் ஆளுநரையும் கண்டித்து, இந்த மாபெரும் உண்ணாவிரதம் தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ளது.

நீட் தேர்வுக்கு எதிராக திமுக உண்ணாவிரத போராட்டம்
நீட் தேர்வுக்கு எதிராக திமுக உண்ணாவிரத போராட்டம்

கழக இளைஞர் அணி – மாணவர் அணி – மருத்துவ அணி செயலாளர்கள் சென்னையில் நடக்கின்ற உண்ணாவிரத அறப்போரில் பங்கேற்கவுள்ளனர். அதேபோல, தமிழ்நாட்டில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ள இந்த உண்ணாவிரத அறப்போரில் அனைத்துத் தரப்பினரும் திரளாகப் பங்கேற்க அழைக்கின்றோம். நீட் தேர்வை ஒழித்து, தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையும் – விலைமதிப்பில்லா உயிரையும் காக்க ஓரணியில் திரள்வோம்!” என்றுள்ளனர்.

இப்போராட்டத்தில் திமுக எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் என அனைவருமே அவரவர் மாவட்டங்களில் கலந்துகொள்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com