காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என கே.என்.நேரு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
பருவ மழை பொய்த்த நிலையில், தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. வறட்சி மற்றும் மழைப்பொழிவு இல்லாத காரணத்தால் சென்னை உட்பட பல பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது. இதனால், தலைநகரமான சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.
மழை வேண்டி கோயில்களில் அதிமுக சார்பில் சிறப்பு யாக பூஜை நடந்து வருகிறது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் பிரச்னையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துகிறது.
இந்நிலையில் திருச்சியில் திமுக சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது காங்கிரசுக்கு இன்னும் எத்தனை காலம்தான் திமுக பல்லக்கு தூக்குவது என அவர் கேள்வி எழுப்பினார். மேலும் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும் இது குறித்து கட்சித் தலைமையிடம் வலியுறுத்துவேன் என்றும அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி நீண்டகாலமாக இருந்து வருகிறது. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த கே.என்.நேருவின் பேச்சு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நேருவின் பேச்சு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சிந்துபாத்தை போல யார் தோள் மீதாவது ஏறி சவாரி செய்வதே காங்கிரஸில் வழக்கம் என தெரிவித்தார்.