“கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் கஜானா காலியாகி 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி கடனில் மூழ்கி இருந்த தமிழகத்தை மீட்டெடுத்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின்'' எனத் தெரிவித்துள்ளார் அமைச்சர் மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கரும்பிராயன் கோட்டை ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்து அந்த பகுதியில் மரக்கன்றுகளையும் அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்களோடு சேர்ந்து நடவு செய்தார்.
அப்போது அவர் பேசுகையில், ''கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏதும் நிறைவேற்றப்படவில்லை. ஆலங்குடி பகுதியில் கஜா புயலால் சேதமடைந்த பள்ளி கட்டிடங்கள் கூட சீரமைக்கப்படவில்லை. தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 240 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசு பள்ளி கட்டிடங்களை புதிதாக கட்டுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன் அடிப்படையில் தான் இன்று கரும்பிராயன்கோட்டை கிராமத்தில் அரசு பள்ளிக்கான இரண்டு வகுப்பறை கட்டும் பணிக்கான தொடக்க விழா நடைபெற்றுள்ளது.
கடந்த பத்தாண்டு கால அதிமுக ஆட்சியில் கஜானா காலியாகி கொரோனா பெருந்தொற்றால் நிதி நிலைமை மோசமாகி 5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் மூழ்கி இருந்த தமிழகத்தை மீட்டெடுத்தவர் முதல்வர் மு.க. ஸ்டாலின். தமிழகம் முழுவதும் திமுக அரசிற்கு ஆதரவு பெருகி வருகிறது. இன்னும் 25 ஆண்டுகளுக்கு திமுக தான் ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும். முதல்வர் மு க ஸ்டாலின் தான் முதல்வராக தொடர்ந்து பதவி வகிப்பார். இது திராவிட மாடல் ஆட்சி'' என்று அமைச்சர் மெய்யநாதன் பேசினார்.